உத்தரகாண்ட் கனமழை: மீண்டும் ரெட் அலர்ட்!
உத்தரகாண்ட் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் 7 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழையில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக அம்மாநிலத்தின் 7 மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெஹ்ராடூன், டெஹ்ரி, பவுரி, ஹரித்வார், சம்பவத், நைனிடால் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு ஜூலை 17ஆம் தேதி (இன்று) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஜூலை 18 ஆம் தேதியன்று (நாளை) மாநிலம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கையை அம்மாநில வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஏற்கனவே, ஜூலை 19 ஆம் தேதியன்று அம்மாநிலம் முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை அமலில் உள்ளது.
உத்தரகாண்ட் வானிலை ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் பிக்ரம் சிங் கூறுகையில், ரெட் அலர்ட் எச்சரிக்கையில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், துறைசார்ந்த அதிகாரிகள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) கமாண்டன்ட் மணிகாந்த் மிஸ்ரா கூறியதாவது, “நீர்நிலைகள் அதிகம் உள்ள இடங்களில் மாநில பேரிடர் மீட்புப் படையின் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன, இதனால் மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்.” என்றார்.
ஹரித்வாரில் மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை தகவலின்படி, அம்மாநிலத்தில் மழை நேற்று நின்றதால், கிராமப்புறங்களில் நிலைமை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஜோஷிமத்-மலாரி நெடுஞ்சாலையில் உள்ள கிராஃப் பாலத்தின் பிளாட்பாரம் மலரியில் இருந்து சும்னா வரை சுமார் 8 கி.மீ தூரத்துக்கு, க்ருதி கங்கை ஆற்றில் அதிகப்படியான நீர் மற்றும் குப்பைகள் காரணமாக சேதமடைந்துள்ளது” என ஜோஷிமத் துணை ஆட்சியர் கும்கும் ஜோஷி தெரிவித்துள்ளார்.
பெண் விவசாயிகளுடன் நடனம் ஆடிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.. வைரல் வீடியோ !!
அந்த பாலத்தில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஹரித்வாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ரூர்க்கி, பகவான்பூர், லக்சர் மற்றும் ஹரித்வார் தாலுகாக்களில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழை காரணமாக இந்த தாலுகாக்களில் உள்ள 71 கிராமங்களில் வசிக்கும் 3,756 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களில் 81 குடும்பங்கள் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏழு வீடுகள் முழுமையாகவும், 201 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.