உ.பி.யில் வெளுத்து வாங்கிய மழை! சாலைகளில் ஆறாக ஓடும் வெள்ளம்! மின்னல் தாக்கி 34 பேர் பலி!
உத்தர பிரதேசத்தில் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களில் மழை தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர். அதில் 10 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். மாநில அரசு அளிக்கும் தகவலின்படி, 34 பேரில், 17 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். 12 பேர் நீரில் மூழ்கியும், 5 பேர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளிலும் இறந்துள்ளனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.
உத்தர பிரதேசத்தில் இந்த ஆண்டு பருவமழை காலத்தில் ஏற்கனவே வழக்கத்தை விட 11 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. இதனால் ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மாநிலத்திலுள்ள 75 மாவட்டங்களில், 68 மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனமழை காரணமாக உ.பி.யில் பாயும் கங்கை, ராமகங்கா, யமுனை, ரப்தி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வட மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி நிலைமையைக் கேட்டறிந்தார். பருவமழை பாதிப்புகளை சீர்செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.