தென்மேற்கு பருவமழை காலத்தில் இரண்டாவது முறையாக கேரளாவில்  கடுமையான மழை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1924ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வெள்ளப் பெருக்கு இம்முறை கேரளாவில் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 27 நீர் டேம்களை கண்டிப்பாக  திறந்து விடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அனைத்து அணைகளுமே தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொடந்து பெய்து வரும் கனமழை, நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு   போன்ற காரணங்களால் இதுவரை 186 பேர் உயிரிழந்துள்ளனர்.

211 இடங்களில் நிலச்சரிவுகளும், மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. பத்தாயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் உள்ளனர். பத்தாயிரம் வீடுகள் வரை முற்றிலும் தகர்ந்து விட்டன. பத்தாயிரம் கிலோமீட்டருக்கும் மேற்பட்ட சாலைகள் தகர்ந்துள்ளன.

இந்நிலையில் நேற்று  இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரளவு மழை குறைந்துள்ளது. அணையில் நீர்வரத்தும் குறையத்தொடங்கியதால் பெரியாறில் திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது.

இதனால் தாழ்வான பகுதிகளிலிருந்து நீர் வடியத்தொடங்கியதும் பலர் தங்களது வீடுகளுக்கு திரும்ப தயாராக உள்ளனர். சேறும் சகதியும் வீடுகளுக்குள் நிறைந்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் அனைத்து தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர்.

இடுக்கி அணையின் நீர்மட்டம் 2400 அடியிலிருந்து 2 அடி குறைந்து திங்களன்று 2398 அடியாக இருந்தது. பெருமழையும், பெரியாறில் 26 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் குறையத் தொடங்கியது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அச்சம்விலகிய மக்கள் இடுக்கி அணையின் ஷட்டர்கள் திறந்து விடப்பட்டுள்ள நீரின் ஆக்ரோஷத்தைக் காண ஏராளமானோர் அப்பகுதிக்கு சென்றனர். நிலச்சரிவையும் சாலைகள் துண்டிக்கப் பட்டதால் ஏற்பட்டுள்ள சிரமங்களையும் பொருட்படுத்தாமல் வந்த அவர்கள் 5 ஷட்டர்களில் வழியும் தண்ணீரை பயம் கலந்த ஆர்வத்தோடு பார்த்து மகிழ்ந்தனர்.

அதே நேரத்தில் சபரிமலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் பம்பையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் ஐயப்பன் கோவிலும் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளதால் பக்தர்கள் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு கோவிலுக்கு வர வேண்டாம் என தேவசம்போர்டு எச்சரித்துள்ளது.