பெங்களூருவில் கனமழை: சென்னைக்கு திருப்பி வைக்கப்பட்ட 14 விமானங்கள்
பெங்களூருவில் பெய்துவரும் கனமழையால் கெம்பேகவுடா விமான நிலையம் நோக்கி வந்த விமானங்கள் சென்னைக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் ஏலஹங்காவில் உள்ள கெம்பேகவுடா சர்வேதச விமான நிலையம் நோக்கி வந்த 14 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. அவற்றில் 12 விமானங்கள் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன. மேலும் இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்திற்கும் ஹைதராபாத் விமான நிலையத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.
இவற்றில் இண்டிகோ விமானங்கள் 7, விஸ்த்ரா விமானங்கள் 3, அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானங்கள் 2, ஏர் இந்தியா விமானம் 1, கோ ஏர் விமானம் 1 அடங்கும். சென்னை சென்ற விமானங்கள் எரிபொருள் நிரப்பப்பட்டதும் மீண்டும் பெங்களூரு திரும்பின.
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 6 விமானங்ககளும் கனமழை காரணமாக தாமதமாக புறப்பட்டன. செவ்வாய்க்கிழமை மாலை இடி மற்றும் மின்னலுடன் பெய்த கனமழையால் மாலை 4.05 மணி முதல் 4.51 மணி வரை விமான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. பின்னர் வழக்கம்போல விமான நிலையச் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
விமான நிலையம் அமைந்துள்ள பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை 45.2 மிமீ மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக, தேவனஹள்ளியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது. மறுபுறம், நகரின் மத்திய பகுதியில் மழை ஏதும் இல்லை.