தலைநகர் டெல்லியில் இன்று காலை கனமழை கொட்டித்தீர்த்து, அங்கு நிலவி வந்த வெப்பத்தை தணித்தது. எனினும், சாலைகளில் தேங்கிய மழை நீரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

டெல்லியில் கடந்த சில நாட்களாகவே அதிக வெப்பம் நிலவி வந்தது. குறிப்பாக, வெள்ளிக்கிழமையன்று சுட்டெரித்த வெயில், கோடை காலம் வந்துவிட்டதோ என்று நினைக்க தோன்றியது. ஆனால், மக்களை மகிழ்விக்கும் வகையில், இன்று காலை திடீரென பல இடங்களில் பலத்த மழை பெய்தது. 

குறிப்பாக, மோதி பக், ஆர்.கே.புரம், லக்‌ஷி நகர் உள்ளிட்ட இடங்களில் அடைமழை பெய்து, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனால், வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

டெல்லியில் இன்று வானம் மேகமூட்டமுடன் இருக்கும்; மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பை, மழை உதவியுள்ளதாக, டெல்லிவாசிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.