கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் இருந்து தான் காவிரி ஆறு உற்பத்தியாகிறது. கிட்டத்த்ட்ட கர்நாடக மற்றும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படும் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் இயற்கை பேரிடர் குழு மற்றும் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தற்போது குடகில் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் பனிப்பொழிவும் அதிகமாக இருக்கிறது. இதனால் ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இன்று குடகு மலைப்பகுதியில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குடகு – மங்களூரு இடையே முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மடிகேரி-சம்பாஜே ரோடு, மடிகேரி-மாதாபுரா ரோடு, குசால்நகர்-ஹாசன் ரோடு உள்பட மாவட்டம் முழுவதும் முக்கியமான பல சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.. அத்துடன் தொடர் மழையால் சில தரைமட்ட பாலங்கள், சிறிய பாலங்களையும் தண்ணீர் மூழ்கடித்து செல்கின்றன.

தொடர்ந்து கொட்டி தீர்த்துவரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் தாண்டி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பாகமண்டலா பகுதியில் காவிரி ஆற்றங்கரையையொட்டிய பகுதி முழுவதும் வெள்ள நீர் புகுந்து ஆர்ப்பரித்து செல்கிறது. அதுபோல் பாகமண்டலா, கரடிகோடு, கூடிகே, குய்யா, நாபொக்லு, பேத்ரி, பூக்கோலா உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.