உத்தரபிரதேசத்தில் கடும் வெப்பத்தின் காரணமாக ரயிலில் பயணித்த 4 தமிழகர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

கடந்த சில நாட்களுக்கு டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எனப்படும் வெயில் அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதிலும் வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. குறிப்பாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதியில் வரலாறு காணாத அளவு 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது.

 

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 68 பேர் வாரணாசி மற்றும் ஆக்ராவிற்கு சுற்றுலா சென்றனர். பின்னர் ஆக்ராவில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதிகொண்ட சாதாரண பெட்டியில் கோவைக்கு நேற்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஜான்சி அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் வெப்பம் தாங்க முடியாமல் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

இறந்தவர்கள் விவரம்:  பச்சைய்யா (80) பாலகிருஷ்ண ராமசாமி (69) தனலட்சுமி (74)  தெய்வானை (71) ஆகியோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் சுப்பாரய்யா (71) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 4 பேர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த அறிக்கை வந்த பின்னரே  உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.