haryana minister controversial speech

ஒரு இந்து, ஒருபோதும் தீவிரவாதியாக மாறமாட்டார், தீவரவாதியாக இருக்கமாட்டார். அதனால், இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையே கிடையாது என்று ஹரியானா மாநில அமைச்சர் அணில் விஜ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

டெல்லியையும், பாகிஸ்தானின் லாகூர் நகரத்தையும் இணைக்கும் வகையில் சம்ஜாஹூதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் கடந்த 2007ம் ஆண்டு பிப்ரவரி 18ந்தேதி, டெல்லி அருகே பானிபட் என்ற இடத்தில் சென்றபோது, இரு பெட்டிகளில் வைக்கப்பட்ட பயங்கர வெடிகுண்டு வெடித்தது. இதில் 68 பேர் உடல்சிதறி பலியானார்கள். இதில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பயணிகள்.

இந்த குண்டுவெடிப்பு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சி, இது இந்து வலது சாரி இயக்கங்களின் சதித்திட்டம் என்று குற்றம்சாட்டியது.

இது குறித்து ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அணில் விஜ் நேற்று நிருபர்களுக்கு சண்டிகரில் பேட்டி அளித்தார். அப்போது கூறுகையில், “ சம்ஜாஹூதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பை முந்தைய காங்கிரஸ் ஆட்சிதான் அரசியல் ரீதியாக பயன்படுத்துகிறது. இதை இந்து தீவிரவாதிகள் செய்தார்கள் எனக் குற்றம்சாட்டியது.

ஒன்று சொல்கிறேன், ஒரு இந்து தீவிரவாதியாக இருக்கவே முடியாது. ஒரு இந்து தீவிரவாதியாக எப்போதும் மாறமாட்டார், இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையே கிடையாது. இந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.ஆனால், அவர்களை பாகிஸ்தானுக்கு காங்கிரஸ் அரசு தப்பவிட்டு விட்டது.

ஆனால், உள்நாட்டில் சிலரை கைது செய்த காங்கிரஸ் அரசு, அவர்களை இந்து தீவிரவாதிகள் என முத்திரை குத்துகிறது. இது முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அரசியல் விளையாட்டு. காங்கிரஸ் ஆட்சியில் தப்பிக்க விடப்பட்ட பாகிஸ்தானியர்கள் இப்போது அங்கு சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

அரசியல் உள்நோக்கத்துக்காகவே இந்துத் தீவிரவாதம் என்ற வார்த்தையை காங்கிரஸ் கட்சி பயன்படுத்துகிறது. இந்த உலகில் இந்துத் தீவிரவாதம் என ஒன்று இருந்து இருந்தால், உலகில் வேறு எந்த தீவிரவாதமும் இருக்காது” எனத் தெரிவித்தார்.

இதற்கு முன், இதுபோல் சர்ச்சைக்குரிய வகையில் அணில் விஜ் பேசியுள்ளார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி அரசியலைவிட்டு விலகி, அவரின் மைத்துனர் ராபர்ட் வத்ராவுடன் சேர்ந்து ரியல்எஸ்டேட் தொழில்செய்யலாம் என்றார்.

காதி பொருட்களில் மகாத்மா காந்தி பெயரை ஏன் தொடர்ந்து போட வேண்டும், அதற்கு அவருக்கு எழுதிவைக்கப்பட்டதா, இதேபோலத்தான் ரூபாயிலும் காந்தி படம் உள்ளது. மகாத்மாகாந்தி உருவம் இருப்பதால், ரூபாய் நோட்டு தடை வந்தது, அவரின் உருவத்தை நீக்கி, பிரதமர்மோடியின் உருவத்தை பொறிக்க வேண்டும் என்றார்.