உலக அளவில் தனது கொடூரத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரப்படி 7 ஆயிரத்தை 500 ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருப்பதாக 7,747 பேர் கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 239 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1574 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருகின்றனர்.  ஹரியானா மாநிலத்திலும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. அங்கு இதுவரையில் 145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர். 3 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் 29 பேர் குணமடந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்படும் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் டெஸ்ட் எடுப்பவர்கள் என கொரோனா தடுப்பு பணியில் இருப்பவர்களுக்கு சம்பளம் இரட்டிப்பாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.