ஹல்திராம்  என்ற பெயர் உணவுப் பிரியர்களுக்கு பழக்கமான பெயர்தான். நாடு முழுவதும் பல கிளைகயைக் கொண்டுள்ள இந்த ரெஸ்டாரண்டு பிரபலமானது.

இந்நிலையில் யஷ் அக்னிகோத்ரி என்ற வழக்கறிஞர்  தனது குடும்பத்துடன்  நாக்பூரில் உள்ள ஹல்திராம் ஓட்டலுக்கு சென்றார். அங்கு அவர்,சாம்பார் வடை ஆர்டர் செய்தார்.
சிறிது நேரம் கழித்து அவர், ஆர்டர் செய்த சாம்பார் வடை தட்டில் வைத்து அவருக்கு பரிமாறப்பட்டது. 

ஆசையுடன் எடுத்து சாப்பிட தொடங்கிய அவருக்கு காத்திருந்து மிகப் பெரிய அதிர்ச்சி. அவருக்கு கொண்டு வரப்பட்ட சாம்பார் வடையில் பல்லி ஒன்று செத்து மிதந்துக் கொண்டிருந்தது. 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனே தனது குடும்பத்தாரை சாப்பிடுவதை நிறுத்தும்படி சத்தம் போட்டுள்ளார். பின்பு பல்லி செத்துக் கிடக்கும் சாம்பார் வடையை புகைப்படமும் எடுத்தார்.பின்பு, அங்கிருந்த ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் மேனேஜரிடம் விளக்கம் கேட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளிடம் யஷ் அக்னிகோத்ரி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் ஹல்திராம் ரெஸ்டாரண்டில் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் ஹோட்டலின் சமையலையில் இருந்த ஜன்னல் மூடப்படாமல் இருப்பதும்  அதன் வழியாக பல்லி சாம்பாரில் விழுந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. பின்பு ஹல்திராம் ரெஸ்டாரண்டுக்கு எதிராக உணவுத்துறை ஆணையர் வழக்குப்பதிவு செய்துள்ளார். 
சாம்பாரில் பல்லி மிதந்து கிடந்த புகைப்படம்  தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.