Gyanesh Kumar: ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயதை அடையும் வரை. எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் நீடிப்பார்கள்.

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் திங்கள்கிழமை (பிப்ரவரி 17) நியமிக்கப்பட்டுள்ளார். 65 வயதை எட்டும் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை ஓய்வு பெறுவதை அடுத்து, ஞானேஷ் குமார் பதவியேற்பார்.

தலைமைத் தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். அல்லது அவர்கள் 65 வயதை அடையும் வரை. எது முதலில் வருகிறதோ அதுவரை.

பிரதமர் நரேந்திர மோடி , மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான தேர்வுக் குழுவால் ஞானேஷ் குமாரின் பெயர் தேர்வு செய்யப்பட்டது. இந்தக் குழு செவ்வாய் மாலையில் பிரதமர் அலுவலகத்தில் கூடி, தேடல் குழுவால் வழங்கப்பட்ட பரிந்துரைப் பட்டியலில் இருந்து ஞானேஷ் குமாரைத் தேர்வு செய்தது.

சீனா பற்றிய சர்ச்சை பேச்சு: சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு காங்கிரஸ் மறுப்பு

முன்னதாக, புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்வதை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருந்தது. தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதைக் காரணம் காட்டி, அதுவரை புதிய தலைமைத் தேர்தல் ஆணையரின் நியமனத்தை ஒத்திவைக்க வேண்டும் என காங்கிரஸ் முன்மொழிந்தது.

தேர்வுக் குழுவின் கூட்டத்தைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி, தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் குழுவிலிருந்து இந்திய தலைமை நீதிபதியை விலக்கியதற்காக மத்திய அரசை விமர்சித்தார். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அதனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பாஜக அரசு முயற்சி செய்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.

பழைய நடைமுறையில் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் குழு பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரை உள்ளடக்கியதாக இருந்தது. இதனை பாஜக அரசு தனக்கு வசதியாக மாற்றி அமைத்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை குழுவிலிருந்து நீக்கிவிட்டு, பிரதமரால் நியமிக்கப்படும் ஒரு மத்திய அமைச்சர் குழுவில் இடம்பெறலாம் என புதிய விதியைக் கொண்டுவந்தது. இதற்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து கடுமையான கண்டனங்கள் வந்தன. இருப்பினும் மோடி அரசு விமர்சனங்களைப் புறந்தள்ளிய நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.