புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

மக்களவைத் 2024 நெருங்கி வருகிறது. இன்று அல்லது நாளை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் இன்று புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து பதவி ஏற்றுக் கொண்டனர். கடந்த 9ஆம் தேதி தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு முன்னதாக பதவிக் காலம் முடிந்து அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெற்று இருந்தார். தேர்தல் அதிகாரிகள் இல்லாமல் ராஜீவ் குமார் மட்டுமே பணிகளை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று பதவி ஏற்றுக் கொண்டு இருக்கும் புதிய ஆணையர்களான ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து இருவரையும் ராஜீவ் சந்திர பாண்டே வரவேற்றுள்ளார். இவர்களை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழு தேர்வு செய்தது. இவர்களது தேர்வுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். ஞானேஷ்குமார் கேரளாவைச் சேர்ந்தவர். சுக்பீர் சிங் சாந்து உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

Scroll to load tweet…

விரைவில் தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் இவர்கள் பதவியேற்றுக் கொண்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பிரதமர் தலைமையிலான தேர்தல் தேர்வுக் குழு நியமிக்கப்பட்ட பின்னர் தேர்வு செய்யப்பட்ட முதல் ஆணையர்களாக இவர்கள் கருதப்படுகின்றனர். இவர்கள் இருவரும் 1988 ஆம் ஆண்டில் ஐஏஎஸ் தேர்வு பெற்று பணியில் சேர்ந்தனர். 

ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து இன்று பதவியேற்றுக் கொண்டு இருக்கும் நிலையில், இன்று அல்லது நாளை மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் தலைமை ஆணையம் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தேர்தல் ஆணையர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.