பாஜக அமைச்சர், வேட்பாளர் கான்வாய் மீது துப்பாக்கிச்சூடு: பீகாரில் பரபரப்பு!
பீகாரில் பாஜக அமைச்சரும், வேட்பாளருமான ராம் கிருபால் யாதவ் கான்வாய் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நாடு முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. முன்னதாக, 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு ஏழாவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.
அந்த வகையில், பீகார் மாநிலத்தின் 8 மக்களவைத் தொகுதிகளுக்கு 7ஆவது கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அம்மாநிலத்தில் நடந்த வாக்குப்பதிவின் போது மத்திய அமைச்சரும், பாடலிபுத்ரா தொகுதியின் பாஜக வேட்பாளருமான ராம் கிருபால் யாதவ் கான்வாய் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது, துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. ஆனால், மத்திய அமைச்சர் நூலிழையில் உயிர் தப்பினார்.
பாடலிபுத்ரா மக்களவை தொகுதியின் மசௌர்ஹி பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருகாலத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு நெருக்கமானவராக இருந்த ராம் கிருபால் யாதவ், தற்போது பாஜகவில் உள்ளார். அக்கட்சியின் சார்பில் பாடலிபுத்ரா தொகுதியில் 2014ஆம் ஆண்டு முதல் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.
பாடலிபுத்ரா தொகுதியில் அவருக்கு எதிராக லாலு பிரசாத் யாதவின் மகளும் ராஜ்யசபா எம்பியுமான மிசா பார்தி போட்டியிடுகிறார். கடந்த இரண்டு தேர்தல்களிலும் ராம் கிருபால் யாதவிடம் மிசா பார்தி தோல்வியடைந்தார்.
கோவை போலீசார் குறித்து அவதூறு வீடியோ- பெண் மீது ஏழு பிரிவுகளில் பாய்ந்த வழக்கு!
மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்டத்தில் பீகார் மாநிலம் பாடலிபுத்ரா தொகுதிக்கு நேற்று தேர்தல் நடந்தது. ராஷ்ட்ரிய ஜனதாதள எம்எல்ஏ ரேகா பாஸ்வான் நேற்று ஒரு வாக்குச் சாவடிக்குச் சென்றதாகவும், அவரது உதவியாளர்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி அறிந்த ராம் கிருபால் யாதவ், வாக்குச்சாவடிக்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேசினார். அவர் திரும்பி வந்து கொண்டிருந்த போது, அவரது கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ராம் கிருபால் யாதவ் தப்பித்தாலும், அவரது ஆதரவாளர்கள் சிலர் தாக்கப்பட்டனர்.
இதையடுத்து அமைச்சரின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சம்பவ இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.