gujarath assembly election date announced

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் மொத்தம் 182 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. குஜராத் எம்.எல்.ஏக்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், குஜராத் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்காக இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி செய்தியாளர்களை சந்தித்தார்.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு, டிசம்பர் 9-ம் தேதி 89 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும் டிசம்பர் 14-ம் தேதி 93 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தெரிவித்துள்ளார்.

தற்போது முதல் குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன என தெரிவித்தார்.

மேலும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களிலும் ஒப்புகைச்சீட்டு எந்திரங்கள் இணைக்கப்படும் எனவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள பாதை அமைத்துத் தரப்படும் எனவும் தெரிவித்தார். 102 வாக்குச்சாவடிகள் மகளிர்க்கான பிரத்யேக வாக்குச்சாவடிகள் என ஜோதி கூறினார்.

வேட்பாளர்கள், தேர்தல் செலவினங்களை மேற்கொள்ள தனி வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் எனவும் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் எனவும் தெரிவித்தார். வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் பறக்கும்படை மூலம் கண்காணிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தெரிவித்தார்.

பதற்றமான வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் காவல்துறை கண்காணிப்பாளர்களாக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.

குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படக்கூடாது.