மயானமாக மாறும் குஜராத் ஜெயில்கள்! காவல் நிலைய மரணங்களில் முதலிடம்!
நாட்டில் காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்கள் அதிகமாக உள்ள மாநிலம் குஜராத் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் அதிக காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்த மாநிலங்களின் வரிசையில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் 80 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதுதொடர்பான தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) அறிக்கையின்படி, குஜராத்தில் 2017–18ல் 14 பேர், 2018–19ல் 13 பேர், 2019–20ல் 12 பேர், 2021-22ல் 24 பேர் காவல் நிலையங்களில் மரணம் அடைந்துள்ளனர்.
குஜராத் சிறைகளில் உள்ள கைதிகளின் நிலை குறித்து அமைச்சகம் அளித்துள்ள புள்ளிவிவரங்களும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. முக்கியமாக, குஜராத்தின் சிறைகள் 2,598 கூடுதல் கைதிகளால் நிரம்பி வழிகின்றன. அந்த மாநிலத்தில் 13,999 கைதிகளுக்கான இடம் உள்ளது. ஆனால், தற்போது 16,597 கைதிகள் அதன் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மக்களவையில் காங்கிரஸ் எம்பி அப்துல் கலீக் கேட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா இந்த விவரங்களை அளித்துள்ளார். இதேபோன்ற மற்றொரு கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலில் வேறு சில புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.
குஜராத்தில் மொத்தம் 745 காவல் நிலையங்கள் உள்ளன, அவற்றில் 622 காவல் நிலையங்களில் சிசிடிவி கண்காணிப்பு வசதி உள்ளது. 123 காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2020-2021 மற்றும் 2021-2022 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளிலும் குஜராத் காவல்துறையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு ஒதுக்கிய ரூ.25.58 கோடி நிதி விடுவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதுபற்றி விமர்சித்துப் பேசிய குஜராத் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஹிரேன் பேங்கர், “காந்தி - சர்தாரின் குஜராத்தில் அதிகரித்து வரும் காவலில் நிலைய மரணங்கள் மாநிலத்திற்கே அவமானம். சட்டத்தின் ஆட்சி ஒரு சிவில் சமூகத்தை நிர்வகிக்கிறது. ஆனால், பாஜக அரசு காவல் நிலைய சிறைகளை அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய பயன்படுத்துகிறது” என்று சாடியுள்ளார்.
“குஜராத்தின் சிறைகள் ஏற்கனவே நிரம்பி வழிகின்றன. அரசாங்க அறிக்கையின்படி, குஜராத்தில் 22,696 குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்படும்போது, அவர்கள் எங்கு அடைக்கப்படுவார்கள்? புதிய சிறைகள் கட்டப்படுமா? அவை எப்போது நிறைவேறும்?'' என்று காங்கிரஸ் தலைவர் பார்த்திவராஜ் சிங் கேள்வி எழுப்புகிறார்.