போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளுக்கு பலமடங்கு அபராத தொகையை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இது நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் மேற்கு வங்கம், கேரளா போன்ற சில மாநிலங்களில் எதிர்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் பாஜக அரசு நடைபெறும் குஜராத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராத தொகை 25 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு 1000 ரூபாய் அபராத தொகையை மத்திய அரசு விதித்துள்ள நிலையில் அதை 500 ரூபாயாக குஜராத் அரசு குறைத்துள்ளது. ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழிவிடாமல் செல்பவர்களுக்கு 10 ஆயிரம் அபராதம் என்பதை ஆயிரம் ரூபாயாக குறைத்துள்ளது. இருசக்கர வாகனத்தில் மூவர் பயணித்தால் 1000 ரூபாய் அபராதமாக இருக்கும் நிலையில் அதை 100 ரூபாயாக குறைத்துள்ளது குஜராத் அரசு.

மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு 3000 ரூபாய் அபராதமாக குஜராத் அரசு விதித்துள்ளது. மத்திய அரசு இதற்கு 10 ஆயிரம் ரூபாய் விதித்துள்ளது.

இதனிடையே மது போதையில் வாகனம் ஓட்டுதல், உரிய வயதிற்கு வராமல் வாகனம் ஓட்டுதல் போன்றவைக்கான அபராத தொகையை மாநில அரசுகள் மாற்ற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.