ரயில்வே நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய டிரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. சமீபத்திய சோதனையில், ஒரு டிரோன் 25 பெட்டிகளை வெறும் 30 நிமிடங்களில் சுத்தம் செய்து காட்டியது.

ரயில்வே நவீனமயமாக்கலை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாக, ரயில் பெட்டிகளைத் தூய்மைப்படுத்தவும், பராமரிக்கவும் நீரை பீய்ச்சியடிக்கும் டிரோன்களைப் பயன்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்த அதிநவீனச் சுத்தம் செய்யும் முறை சமீபத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, குஜராத்தின் முதல் உதனா-பிரம்மபூர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் முழுவதுமாக டிரோன்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யப்பட்டது.

30 நிமிடங்களில் 25 பெட்டிகளை சுத்தம் செய்யும் டிரோன்

சூரத் மற்றும் உத்னா ரயில் நிலையங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின்போது, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு டிரோன் அமைப்பு 25 ரயில் பெட்டிகளை வெறும் 30 நிமிடங்களில் சுத்தம் செய்தது. டிரோன் பெட்டியின் மேல சென்று, அதிக அழுத்தத்தில் நீரை பீய்ச்சி சுத்தம் செய்தது. இதன் மூலம், வழக்கமாக கையால் சுத்தம் செய்ய 3 மணி நேரம் வரை ஆகும் நிலையில், இந்த முறை பெருமளவு நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்த டிரோன், ரயில் பெட்டியின் மீது அதிக அழுத்தத்தில் நீரைத் தெளிக்க முடியும். இதனால், குறைவான உடல் உழைப்புடன் விரைவாகவும் சிறப்பாகவும் சுத்தம் செய்ய முடியும். ரயில்கள் மட்டுமின்றி, ரயில் நிலையத்தில் உள்ள கூரைகள் மற்றும் பிற உயரமான உள்கட்டமைப்புகளையும் சுத்தம் செய்ய இந்த டிரோன் ஏற்றது.

டிரோன் கிளீனிங் செலவு எவ்வளவு?

ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த டிரோன் தொழில்நுட்பத்தை சூரத்தைச் சேர்ந்த இரண்டு இளம் கண்டுபிடிப்பாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதற்கான செலவு ரூ. 3 லட்சம் முதல் 4 லட்சம் மட்டுமே.

சோதனையின் போது அங்கிருந்த ரயில்வே அதிகாரிகள், டிரோன்களின் செயல்பாட்டால் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்காக ரயில்வே வாரியத்திற்கு ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளனர். ஒப்புதல் அளிக்கப்பட்டால், நீண்ட தூர ரயில்களின் பராமரிப்பில் டிரோன்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

Scroll to load tweet…

நெட்டிசன்கள் கருத்து

இந்த தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து சமூக ஊடகங்களில் கலவையான கருத்துகள் வெளிவந்துள்ளன.

ஒரு பயனர், "இந்த ரயிலில் ஸ்மார்ட்டாக என்ன இருக்கிறது? இது சரியான நேரத்தில் ஓடுகிறதா? முதலில் இவற்றைச் சரிசெய்ய முயற்சிக்கவும்" என்று கூறியுள்ளார். மற்றொருவர், "ரயில்கள் சரியான நேரத்திலும், திறமையாகவும், விபத்துகள் இல்லாமலும் இயங்கும் வரை, இந்த வேலைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை" என்று கூறினார்.

"ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் உள்ள கழிவறைகளைப் பராமரிப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும்" என்று மற்றொருவர் பரிந்துரைத்திருக்கிறார்.