gst tax rate reduced itmes
டீசல் எஞ்சின் உதிரி பாகங்கள், ஆயுர் வேத மருந்துகள் உள்ளிட்ட 27 வகையான பொருட்களுக்கான வரியை குறைத்து ஜி.எஸ்.டி. கவுன்சில் அறிவித்துள்ளது.
நாடுமுழுவதும் ஒரே சீரான வரியை கொண்டு வரும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் 5 , 12, 18, 28 ஆகிய 4 வீதங்களில் பொருட்களின் மீது வரி விதிக்கப்பட்டது. ஆனால், ஜி.எஸ்.டி. வரியில் பல்வேறு குளறுபடிகளும், சாமானிய மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக வரியும் விதிக்கப்பட்டதால் ெபரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும், ஏற்றுமதியாளர்கள், தங்க நகை தயாரிப்பாளர்கள், சிறு, குறு வர்த்தகர்களும் ஜி.எஸ்.டி. வரி உயர்வு குறித்து கவலை தெரிவித்தனர்.
மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் கடந்த 2-ம் காலாண்டில் 5.7 சதவீதமாகக் குறைந்ததால், அதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இதையடுத்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களுடன் 22-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது இதில் 27 வகையான பொருட்களுக்கு வரிகள் குறைக்கப்பட்டன. அது குறித்த விவரம் வருமாறு-
5 சதவீதமாக குறைக்கப்பட்டவை
பதப்படுத்தப்பட்ட மாங்காய், காக்ரா, சப்பாத்தி, ரொட்டி, நம்கீன்(சுவையூட்டும் பொருள்), ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஓமியோபதி மருந்துகள், பேப்பர் கழிவுகள், பட்டுச்சேலைக்கான ஜரிகைகள் ஆகியவை 12 சதவீத வரியில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டன.
12 சதவீதமாக குறைப்பு
கையாள் நூற்கப்பட்ட நூல், சிந்தடிக் பட்டு, நைலான் பட்டு, பாலிஸ்டர், அக்ரிலிக், செயற்கை பட்டு, விஸ்கோஸ் ரேயான் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட 18 சதவீத வரி 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
5 சதவீதம்
பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் ஸ்கிராப், ரப்பர் கழிவுகள், ரப்பர் ஸ்கிராப், கண்ணாடி கழிவுகள், கண்ணாடி பொருட்கள், மரத்தூள்களால் தயாரிக்கப்பட்ட எரிபொருள் ஆகியவற்றின் மீதான 18 சதவீத வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டன.
28-லிருந்து 5-சதவீதமாக குறைக்கப்பட்டவை
கடின ரப்பர், அதன் கழிவுகள், மின்னனு கழிவுகள் ஆகியவை மீதான 28 சதவீத வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது
28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதம்
போஸ்டர் கலர், குழந்தைகள் விளையாடும் ஒரு வகையான களிமண் பேஸ்ட், பளிங்கு கற்கள்(மார்பில்), கிராணைட், காகிதங்கள் வைக்கப்படும் ‘பைல்’, லெட்டர் கிளிப், லெட்டர் கார்னர், பேப்பர் கிளிப், அலுவலகங்களில் பயன்படும் ஸ்டேஷனரி பொருட்கள், 15 எச்.பி.க்கு மிகாமல் இருக்கும் டீசல் எஞ்சின்களுக்கான உதிரி பாகங்கள், நீர் இறைக்கப்படும் பம்ப்புகள், ஆழ் கிணற்றில் பயன்படும் பம்ப்புகள், சப்மெர்சல் பம்ப்கள், உள்ளிட்ட பம்ப்புகளுக்கு வரி 28 லிருந்து 18சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன.
மேலும், சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமாக மக்கள் தங்க நகைகள் வாங்கினால் தங்களின் பான்கார்டு எண்ணை கடைக்காரரிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் நகை வாங்கியவர்கள் குறித்த விவரத்தையும் வருமான வரித் துறைக்கு நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
2. ஆண்டுக்கு ஒரு கோடி வரை விற்று முதல் இருக்கும் ஏ.சி. ரெஸ்டாரண்ட்கள் மீது 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை மறுபரிசீலனை செய்ய முடிவு.
3. ஆண்டுக்கு ரூ. 1.5 கோடி வரை விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்களே 90 சதவீதம் வரி செலுத்துபவர்களாக இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் செலுத்தும் வரியின் பங்கு 5 முதல் 6 சதவீதம்தான். இந்த நிறுவனங்கள் இனிமேல் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஜி.எஸ்.டி. ரிட்டன் தாக்கல் செய்தால் போதுமானது.
4. ரூ.75 லட்சம் வரை விற்று முதல் இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே ‘காம்போஷிசன்’ வரிசெலுத்தும் திட்டத்தில் இருக்க முடியும். இனி இனி விற்றுமுதல் அளவு ரூ. ஒரு கோடியாக இருக்கும் நிறுவனங்களும் காம்போஷிசன் திட்டத்துக்குள் வர முடியும்.
5. அரசு ஒப்பந்தங்களை எடுத்து கட்டிட வேலை பார்க்கும் தனிமனிதர்கள் 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி செலுத்தி வந்தனர். அந்த வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
6. ஏற்றுமதியாளர்கள் தாங்கள் செலுத்திய ஜூலை, ஆகஸ்ட் மாதத்துக்கான வரி ரீபண்ட் இம்மாதம் 18-ந்தேதிக்குள் கிடைக்கும்.
7. ஆண்டுக்கு ரூ. ஒரு கோடி வரை விற்று முதல் இருக்கும் வர்த்தகர்கள் அரசுக்கு ஒரு சதவீதம் ஜி.எஸ்.டி வரியும், ரெஸ்டாரன்ட்கள் 5 சதவீதம் வரியும், உற்பத்தியாளர்கள் 2 சதவீதமும் வரி செலுத்தலாம்.
