நாடுமுழுவதும் ஒரே வரி விதிப்பான ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்தும் வகையில் 4 வகையான வரி முறையை நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் வெளியிட்டுள்ளது. 

இதன்படி, 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் ஆகிய வரிகள் விதிக்கப்பட இருக்கின்றன. 

நாட்டில் ஒவ்வொரு மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் பல வரி விதிப்புகளை களைந்து, நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) உருவாக்கியது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி, பெரும்பகுதியான மாநில சட்டசபையிலும் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது. 

இந்த ஜி.எஸ்.டி. வரியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஜி.எஸ்.டி. வரியில் விதிக்கப்படும் வரிகள் குறித்து முடிவு செய்ய ஜி.எஸ்.டி. கவுன்சில் உருவாக்கப்பட்டது

இந்த ஜி.எஸ்.டி. குழுவுக்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைவராகவும், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர். 

இந்த ஜி.எஸ்.டி. குழு இதற்குமுன் இரு முறை கூடி வரி வீதங்கள் குறித்து கலந்தாய்வு செய்தது. அந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கும் பொருட்கள், எந்த அளவு வருவாய் ஈட்டுவரை ஜி.எஸ்.டி. வரிக்குள் கொண்டு வரலாம் என ஆலோசிக்கப்பட்டது. 

ஆனால், ஜி.எஸ்.டி. வரி வீதங்கள் குறித்து மாநிலங்களுக்குள் கருத்தொற்றுமை வரவில்லை. இதையடுத்து, டெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் நேற்று கூடி கலந்தாய்வு செய்தது. அதில் அனைத்து மாநிலங்களுக்கும் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு, வரி வீதங்கள் முடிவு செய்யப்பட்டன. 

அதன்படி, உணவு தானியங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமா 5 சவீதத்தில் இருந்து அதிகபட்சமாக 28 சவீதம் வரை விதிக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது, 5 சவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், மற்றும் 18 சவீதம் ஆகிய வரிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. 

இதில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய், மளிகைப்பொருட்கள், டீத்தூள், காபி தூள் உள்ளிட்ட பல சமையல் பொருட்களுக்கு தற்போது 9 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இனி அது 5 சவீதமாகக் குறைகிறது. சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டும், பலவற்றுக்கு விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், உள்ளிட்ட பொருட்களுக்கு தற்போது 9 சவீதம் முதல் 15சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இனி அது நிரந்தரமாக 12 சதவீதமாக மாற்றப்படுகிறது. 

குளியல் சோப், சேவிங் க்ரீம், தலைக்கு தேய்க்கும் எண்ணெய், உள்ளிட்ட வேகமாக நுகரப்படும் பொருட்களுக்கு(எப்.எம்.சி.ஜி.) தற்போது 18 முதல் 21 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. அது இனி மாற்றப்பட்டு, நிரந்தரமாக 18 சதவீதமாக குறைக்கப்படும். 

எல்.சி.டி. எல்.இ.டி. டிவி. வாஷிங்மெஷின் உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்டு 21 சதவீத வரி இனி 28 சதவீதமாக உயர்கிறது. 

பான் மசாலா, குட்கா, புகையிலை, பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குளிர்பானங்கள், மதுவகைகள் ஆகியவற்றுக்கு தற்போதுள்ள 40 சதவீதம் முதல் அதிபட்சமான 65 சதவீதம் வரி தொடரும். அதேசமயம், கூடுதல் வரிகளும் விதிக்கப்படும். 

இது குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், திட்டமிட்டபடி, ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவது பணிகள் நடந்து வருகின்றன. ஜி.எஸ்.டி. வரிகள் குறித்து முடிவு செய்து இருக்கிறோம். 4 வகையான வரி விதிப்புகளுக்கு மாநிலங்களுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. தங்கத்துக்கு குறைந்தபட்சமாக 4 சதவீதம் வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார்.