GST rollout Government sets up mini war room to deal with crises

சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) ஜூலை 1-ந்தேதி நடைமுறைக்கு வரும் போது, அதில் ஏற்படும் பிரச்சினைகள், சந்தேகங்களை தீர்த்து வைக்க, பல உதவி எண்கள், கணினி வசதியுடன் கூடிய ‘மினி உதவி அறை’யை நிதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.

நாடுமுழுவதும் மறைமுக வரிகள் நீக்கப்பட்டு, ஜி.எஸ்.டி. வரி ஜூலை1-ந் தேதி நடைமுறைக்கு வர உள்ளது. ஜி.எஸ்.டி.வரிவிதிப்பு முறைக்கு ஏற்றார் போல் வர்த்தகர்கள், நிறுவனங்கள் இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை. இதனால், ஜி.எஸ்.டி. வரியில் அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், கணக்குகளை பராமரிப்பதில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்க நிதி அமைச்சகம் சார்பில் உதவி அறை அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை வாரியத்தின் தலைவர் வனஜா என். சர்னா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “ ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கும் ஜி.எஸ்.டி. வரி குறித்து மாநில, மத்திய அரசு அதிகாரிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கவும், தௌிவுபடுத்தவும் புதிதாக ‘மினி உதவி அறை’ அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் மாநில அரசு, மத்திய அதிகாரிகள் ஜி.எஸ்.டி. தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பினால், உடனுக்குடன் தௌிவுபடுத்தி, அது குறித்து நிதி அமைச்சகத்துக்கு பதில் அளிக்கப்படும். இந்த சிறிய உதவி அறை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 14 மணிநேரம் செயல்படும்.

இந்த சிறிய உதவி அறையில் இளம் அதிகாரிகள் அதிகாரிகளுக்கு உதவியாக இருந்து, ஜி.எஸ்.டி. தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். இந்த அறையில் ஏராளமான எண்களில் தொலைபேசி இணைப்புகள், தடங்கல் இல்லாமல் இருக்கும் வகையில் கணினி வசதிகள் செய்யப்பட்டுள்ளன’’ எனத் தெரிவித்தார்.