4 வகை வரி குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆலோசனை
புதுடெல்லி, அக். 19:-
அடுத்த நிதியாண்டு முதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வர இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரியின்(ஜி.எஸ்.டி.) வரி வீதங்கள் குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையிலான ஜி.எஸ்.டி. கவுன்சில் நேற்று ஆலோசனை நடத்தியது.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் 4 வகையான வரி வீதங்களை மத்திய அரசு முன்மொழிந்தது. குறைந்தபட்சமாக 6 சதவீதமும், அதிகபட்சமாக 26 சதவீதமும் வரி விதிக்க ஆலோசிக்கப்பட்டது. மேலும், மாநிலங்களுக்கு ஏற்படும் வரிவருவாய் இழப்பை ஈடு செய்வது குறித்தும் மத்திய அரசுடன் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் ஒரே வரிவிதிப்பான சரக்கு மற்றும் சேவை வரியை(ஜி.எஸ்.டி.) மத்திய அரசு அடுத்த நிதியாண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட சட்ட மசோதா இரு மாநிலங்களிலும் நிறைவேறி, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார்.
இதையடுத்து, ஜி.எஸ்.டி. வரி அமைப்பில், எந்த பொருட்களுக்கு வரி விதிக்கலாம், எதற்கு வரி விலக்கு அளிக்கலாம், வரி எந்த அளவீடு இருக்கலாம், மாநிலங்களுக்கு ஏற்படும் வரிவருவாய் இழப்பை ஈடு செய்வது குறித்து ஆய்வு செய்ய ஜி.எஸ்.டி. குழு அமைக்கப்பட்டது.
இம்மாதம் 22-ந்தேதிக்குள் வரி வீதங்கள் குறித்து இறுதிமுடிவு எடுக்க வேண்டும் என்பதால், ஜி.எஸ்.டி. கவுன்சில் குழுக்கூட்டம் பரபரப்பை எட்டியுள்ளது.
இந்த ஜி.எஸ்.டி. குழுவுக்கு நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைவராகவும், அனைத்து மாநிலங்களின் சார்பில் நிதியமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் இடம் பெற்று இருந்தனர். இந்த ஜி.எஸ்.டி. குழுவின் முதல் கூட்டம் கடந்த மாதம் நடந்தது. அதில், அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வரை விற்றுமுதல் ஈடுபடும் வர்த்தகர்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தநிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 3-நாள் கூட்டம் புதுடெல்லியில் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தலைவர் நிதியமைச்சர் ஜெட்லி, மற்றும் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு பின், நிதியமைச்சர் அருண்ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:
ஜி.எஸ்.டி.கவுன்சிலின் இன்றைய(நேற்று) கூட்டத்தில் 4 வகையான வரி வீதங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. அதாவது, குறைந்த பட்சம் 6 சதவீதமும், அதிக பட்சமாக 26 சதவீதம் நிர்ணயிப்பது குறித்து பேசப்பட்டது. ஆனால், எந்த இறுதி முடிவும் எட்டப்படவில்லை. நாளையும்(இன்றும்) ஆலோசனை தொடரும்.
ஆடம்பர பொருட்கள், புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கு அதிகபட்சமாக 26 சதவீதம் வரியும், அத்தியாவசியப் பொருட்களுக்கு குறைந்த அளவாக 6 சதவீத வரியும், நிலையான வரியாக 18 சதவீதம் நிர்ணயம் செய்யவும் பரிசீலிக்கப்பட்டது. மேலும், விலைமதிப்பு மிக்க பொருட்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் வரி விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
அதேசமயம், உணவுப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கவும் , பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுப் பயன்பாட்டில் இருக்கும் 50 சதவீதப் பொருட்களுக்கும் வரி விலக்கு அளிக்க கலந்தாய்வு செய்யப்பட்டது.
ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்தும் போது மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில், அடிப்படை ஆண்டாக 2015-16ம் ஆண்டில் இருந்து கணக்கில் எடுத்துக்கொள்ள மாநிலங்களிடம் ஒப்புதல் பெறப்பட்டன. மேலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கான வரிவருவாய் இழப்பை ஈடு செய்யவும், சரிசமமாக அனைத்து மாநிலங்களிலும் 14 சதவீத வளர்ச்சிக்கும் கருத்தொற்றுமை கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் 2 நாள் கூட்டம் இருக்கும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
