இட்லி, தோசை மாவு, பொட்டுக் கடலை,ரப்ர் பேண்டு, மழைக் கோட்டு உள்ளிட்ட 30 விதமான பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 21–வது கூட்டம் ஐதராபாத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த நிதி அமைச்சர்கள்  மற்றும் மத்திய, மாநில அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள், பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை குறைக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதை ஜி.எஸ்.டி. கவுன்சில் ஏற்றுக்கொண்டது.

இதேபோல் வரி அதிகமாக விதிக்கப்படும் பொருட்களுக்கு வரி குறைப்பு செய்யவேண்டும் எனவும் மாநில நிதி அமைச்சர்கள்  வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய  நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பொட்டுக்கடலை, இட்லி–தோசை மாவு, புண்ணாக்கு, மழைக்கோட்டு, ‘ரப்பர் பேண்டு’ உள்பட 30 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுவதாக அறிவித்தார்.

வாதாம் பருப்பு மீது விதிக்கப்பட்டு வந்த 12 சதவீத வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், கதர் மற்றும் கிராம தொழிற்சாலைகள் ஆணையத்தின் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் கதர் துணிகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு அளிக்கப்படுவதாகவும் அருண் ஜெட்லி கூறினார்.