gst council will be submitted on jult 1st week

ஆடம்பர பொருட்கள் மீது விதிக்கப்படும் 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி மீதான கூடுதல் வரி உச்சவரம்பை 15 சதவீதமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் நிர்ணயித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மறைமுக வரிகளுக்கு மாற்றாக சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் வரி விகிதங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முடிவு எடுப்பதற்காக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.

5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 வகைகளில் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில், ஆடம்பர பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் மீது அதிகபட்ச ஜி.எஸ்.டி. வரி விகிதமான 28 சதவீதம் வசூலிக்கப்படும். ஜி.எஸ்.டி. வரி அமலாக்கத்தால், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

 அதற்காக, ஆடம்பர பொருட்கள் மீதான 28 சதவீத வரி மீது கூடுதல் வரி ஒன்றை விதித்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயை மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த கூடுதல் வரி எத்தனை சதவீதம் இருக்க வேண்டும் என்பது முடிவு செய்யப்படாமல் இருந்தது.இந்நிலையில், ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் டெல்லியில் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது.

அதில், ஆடம்பர பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் மீதான 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி மீது விதிக்கப்படும் கூடுதல் வரியை 15 சதவீதம் என உச்சவரம்புடன் நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு அனைவரும் ஒருமனதாக ஒப்புதல் அளித்தனர்.

மாநில ஜி.எஸ்.டி. மசோதா, யூனியன் பிரதேச ஜி.எஸ்.டி. மசோதா மற்றும் ஜி.எஸ்.டி. இழப்பீடு மசோதா ஆகியவற்றுக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இவை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெற்ற பிறகு, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என அருண் ஜெட்லி தெரிவித்தார்.

ஜூலை 1–ந் தேதி முதல், ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்து விடும் என்றும் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் அடுத்த கூட்டம், வருகிற 31–ந் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.