gst approved in parliament

சரக்கு மற்றும் சேவை வரியை ஜூலைமாதம் நடைமுறைப்படுத்தும் நோக்கில், அதன் 4 முக்கிய துணைச் சட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

நாடாளுமன்றத்தில் இந்த வாரம் இந்த துணைச்சட்டங்கள அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

ஜி.எஸ்.டி. வரி

நாடு முழுவதும் நேரடி, மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒரே வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி விட்டது.

4 வகை வரி

இந்த வரிவிதிப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் இறுதி செய்வதற்காக, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில்அமைக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரியாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 வகையான பிரிவுகளில் வரி விதிக்கவும் ஜி.எஸ்.டி.கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், ஆடம்பரமான கார்கள், குளிர்பானங்கள், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரிதவிர்த்து கூடுதல் வரி விதிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு இழப்பீடு

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டம்

இதுவரை ஜி.எஸ்.டி.வரியை செயல்படுத்துவதற்கான 4 வகையான துணைச்சட்டங்களுக்கு ஜி.எஸ்.டி.கவுன்சில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜி.எஸ்.டி. துணைச்சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது.

இந்த கூட்டம் முடிந்த பின் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

4 வகை ஜி.எஸ்.டி மசோதா

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. மசோதா(எஸ்.ஜி.எஸ்.டி.), மத்திய சரக்கு மற்றும் சேவை மசோதா (சி.ஜி.எஸ்.டி.), ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஐ.ஜி.எஸ்.டி.), யூனியன் பிரதேசங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (யு.டி.ஜி.எஸ்.டி.), மாநிலங்களுக்கு இழப்பீடு தரும் ஜி.எஸ்.டி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விவாதம்

இந்த மசோதாக்கள் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவாக தாக்கல் செய்யப்படும். இந்த 4 மசோதா மீதான விவாதமும் ஒன்றாகவே நடைபெறும்.

நாட்டில் மிகப்பெரிய வரிச்சீர்திருத்தமான ஜி.எஸ்.டி. வரியை விரைவாக நடைமுறைப்படுத்துவதில் மத்தியஅரசு தீவிரமாக இருக்கிறது. ஜூலை மாதம் 1-ந்தேதி நடைமுறைக்கு கொண்டு வரவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மசோதாக்கள்

இதில் மத்திய ஜி.எஸ்.டி. மசோதாவின்படி, மாநிலங்களுக்கு வெளியே கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மத்திய அரசு வரி விதிப்பது மற்றும் வரி வசூல் செய்வதாகும்.

ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி என்பது, மாநிலங்களுக்கு உள் கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மத்திய அரசு வரிவிதிக்கவும், வசூல் செய்யவும் வகை செய்கிறது.

யூனியன்பிரதேசங்களுக்கான ஜி.எஸ்.டி என்பது யூனியன் பிரதேசங்களுக்கு வெளியே கொண்டு செல்லப்படும் பொருட்கள் சேவைகளுக்கு வரிவிதிப்பது மற்றும் வசூல் செய்வது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.