AsianetNews Samvad : பிரபல இசையமைப்பாளரும், கிராமி விருது பெற்றவருமான ரிக்கி கேஜ், ஏசியாநெட் நியூஸ்-ன் 'சம்வாத்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்திய இசையை எல்லைகளை கடந்து உலகிற்கு எடுத்துச் செல்லும் தனது முயற்சியைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
ஏசியாநெட் நியூஸ்-ன் 'சம்வாத்' நிகழ்சி, சமூகத்திற்கு பங்காற்றிய ஆளுமைகளை வெளிஉலகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. இம்முறை, இரண்டு முறை கிராமி விருதை வென்ற இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் கலந்துகொண்டார். கிராமி விருது, இசை உலகில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய இசையை எல்லையில்லா உலகிற்கு கொண்டு செல்வதே தன் முழு முயற்சி என ரிக்கி கேஜ் தெரிவித்தார். மேலும், தனது இசை வாழ்க்கையைப் பற்றியும், சொந்த வாழ்க்கையின் மிகச்சிறந்த சாதனையைப் பற்றியும் அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய ரிக்கி கேஜ், ஒரு இசைக்கலைஞராகவும், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் தன்னை முதன்மைபடுத்திக்கொண்டார். விலங்குகள், இயற்கை, காதல், பயணம் மற்றும் பலவற்றைப் பற்றியும் குறித்த தனது பாடல்களைப் பற்றியும் பேசினார்.
மேலும், இந்தியாவில் உள்ள பாரம்பரிய இசையைத் தவிர, அதன் கலை வடிவங்களைப் பற்றியும் பேசினார். வங்காளத்தில் Baul இசையில் தான் பணிபுரிவதாகவும், தான் உருவாக்கிய திரைப்படத்தை முடிப்பதற்கு நான்கு வருடங்கள் ஆனதாகவும் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் கூறினார். இந்த படம் Baul இசைக்கலைஞரின் வாழ்க்கையை விளக்கும் படமாகவும், 1,000 ஆண்டுகள் பழமையான பாரம்பரியத்தின் கலையை வழிநடத்துகிறது என்றார்.
இந்திய இசை ராகங்கள் குறித்து பேசி ரிக்கி கேஜ், இந்திய பாரம்பரிய இசைக் கலைஞர்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய பாரம்பரியத்தை உலகளவில் பரப்புவதில் முன்னோடியாக உள்ளதாக குறிப்பிட்டார். பாரம்பிரய இசைக்கலைஞர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து அனைத்து கலாச்சார தடைகளையும் உடைத்தெரிந்து முன்னேறி வருகின்றனர் என்றார்.
அக்னிபத் திட்டம், திறமையான மனித வளத்தை உருவாக்கும் முயற்சி - Naukri நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தனி கருத்து
யார் இந்த ரிக்கி கேஜ்?
பெங்களூரு வாசியான ரிக்கி கேஜ், சில மாதங்களுக்கு முன்பு தனது இரண்டாவது கிராமி விருதை ''டிவைன் டைட்ஸ்'' என்ற ஆல்பத்திற்காக வென்றார். இந்த ஆல்பத்திற்காக அவர் புகழ்பெற்ற ராக் இசைக்குழுவான தி போலிஸின் நிறுவனரும் டிரம்மருமான ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் இணைந்து பணியாற்றினார். 64வது வருடாந்திர கிராமி விருதுகளில் சிறந்த நியூ ஏஜ் ஆல்பம் வகையை ரிக்கி கேஜ் டிவைன் டைட்ஸ் வெற்றி பெற்றது.
ரிக்கி தனது "விண்ட்ஸ் ஆஃப் சம்சார" ஆல்பத்தின் மூலம் சிறந்த நியூ ஏஜ் ஆல்பம் வகைக்காக 2015-ல் தனது முதல் கிராமி விருதைப் பெற்றார்.
ரிக்கி கேஜ் தனது இரண்டாவது வெற்றியின் மூலம் ரவிசங்கர், ஜூபின் மேத்தா, ஜாகிர் ஹுசைன், ஏஆர் ரஹ்மான் மற்றும் பலர் அடங்கிய இந்திய சாம்பியன்களின் பிரத்யேக கிளப்பில் இணைந்துள்ளார். பாதி பஞ்சாபி, மீதி மார்வாடி இளைஞனான ரிக்கி கேஐ் 1981-ல் வட கரோலினாவில் பிறந்தார். தனது 8 வயதில் இருந்து பெங்களூரில் வசித்து வருகிறார்.
பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் படித்த ரிக்கி, ஆக்ஸ்போர்டு பல் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவப் பட்டமும் பெற்றுள்ளார். 2014-ல் தனது காதலியான வர்ஷாவை மணந்தார் ரிக்கி கேஜ்.
