சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், தொலைத்தொடர்பு அமைச்சகம் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ உத்தரவிட்டுள்ளது. இந்தச் செயலி பயனர்களால் நீக்க முடியாதபடி இருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளது.
சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், புதிதாக விற்கப்படும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) என்ற செயலியை முன்கூட்டியே (Pre-install) நிறுவுமாறு, தொலைத்தொடர்பு அமைச்சகம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 28ஆம் தேதி இந்தியாவில் இயங்கும் மொபைல் பிராண்டுகளுக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பயனர்கள் இந்தச் செயலியை நீக்கவோ (Uninstall) அல்லது முடக்கவோ (Disable) ஆப்ஷன் கொடுக்கக் கூடாது என்றும் மத்திய அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
நீக்க முடியாத செயலி
சைபர் குற்றங்கள், ஹேக்கிங் மற்றும் ஆன்லைன் மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தச் செயலியை கட்டாயமாகப் புகுத்த வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்துகிறது.
இந்த இரகசிய உத்தரவு, மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு (OEMs) நவம்பர் 28 அன்று அனுப்பப்பட்டுள்ளது. புதிய சாதனங்களில் இந்தச் செயலியை முன்கூட்டியே நிறுவுவதற்கு, நிறுவனங்களுக்கு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது விற்பனையில் உள்ள ஸ்மார்ட்போன்களிலும், சாப்ட்வேர் அப்டேட் (software updates) மூலம் இந்தச் செயலியை நிறுவ வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு நடவடிக்கை
இந்தச் சஞ்சார் சாத்தி செயலி, குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டது என மத்திய அரசு சொல்கிறது.
இதில் உள்ள சக்ஷு போர்டல் (Chakshu Portal) சந்தேகத்திற்கிடமான மோசடி அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ்அப் செய்திகளைப் புகார் அளிக்க உதவுகிறது.
தொலைந்த அல்லது திருடப்பட்ட ஸ்மார்ட்போன்களை நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தொலைத்தொடர்பு நெட்வொர்க்குகளில் இருந்தும் பிளாக் (Block) செய்யலாம். அல்லது கண்காணிக்கலாம்.
ஒரு பயனரின் பெயரில் உள்ள மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கையைச் சரிபார்க்கவும், தேவையில்லாத இணைப்புகளைப் புகார் செய்யவும் இது அனுமதிக்கிறது.
சஞ்சார் சாத்தி செயலி ஜனவரி மாதம் தொடங்கப்பட்டதில் இருந்து, 7,00,000-க்கும் மேற்பட்ட தொலைந்த போன்களை மீட்க உதவியுள்ளது என்றும், கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 50,000 போன்கள் மீட்கப்பட்டன என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் 690 மில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்கள் இருக்கும் நிலையில், இந்தச் செயலியை அனைத்துச் சாதனங்களிலும் நிறுவுவது சைபர் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.


