வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களும் ஆன்-லைன் மூலம் வாக்களிக்கும் வசதியைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று மக்களவையில் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களும் ஆன்-லைன் மூலம் வாக்களிக்கும் வசதியைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று மக்களவையில் தெரிவித்தார்.
மக்களவையில் கேள்வி நேரத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று பேசியதாவது:

ஆதார் எண் இணைப்பு
தேர்தல் வாக்களித்தலில் மோசடி நடப்பது என்பது தீவிரமான குற்றம். இந்தத் தவறைத் தடுப்பது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. தேர்தல் வாக்காளர் பட்டியலில், ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் போலி வாக்களித்தல் முறை தடுக்கப்படும்.
ஆனால் தற்போது வாக்காளர் அட்டவணையுடன் ஆதாரை இணைத்தல் என்பது கட்டாயமில்லை. ஆனால், எங்களுடைய நோக்கம் ஒருதேசம் ஒரே தேர்தல்தான். இதன் மூலம் ஒருவர் ஒரே நேரத்தில் இரு இடங்களில் வாக்களிப்பதைத் தடுக்க முடியும். நியாயமாக வாக்களித்தலை உறுதி செய்ய முடியும்.
வெளிநாடு இந்தியர்கள்
வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்தான். அவர்கள் ஆன்-லைன் மூலம் வாக்களிக்க அனுமதிப்பது குறித்தும் தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்து வருகிறோம். எந்த முடிவும் எடுப்பதற்கு முன்பும், பாதுகாப்பு வெளிப்படைத்தன்மை, குற்றம்நடக்காமல் தடுத்தல் ஆகியவற்றை உறுதிசெய்வோம்” எனத் தெரிவித்தார்

இவிஎம் எந்திரங்கள்
அப்போது காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி எழுந்து, “ மின்னணு வாக்கு எந்திரங்களின் சோர்ஸ் கோட் அதைத் தயாரித்த நிறுவனங்களிடம் இருக்கிறதா அல்லது தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டுவிட்டதா” எனக் கேட்டார்.
அதற்கு அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ பதில் அளி்க்கையில் “ இவிஎம் எந்திரங்கள் என்பது நீதிபதிகளை நியமிக்கும் முறை போன்றது. நீதிபதிகளை அரசு நியமிக்கும் ஆனால் அவர்கள் பதவிக்குவந்தபின் சுயமாக, சுதந்திரமாகச் செயல்படுவார்கள். ஆதலால், யாரும் மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது சந்தேகம் கொள்ள வேண்டாம். அதில் தலையீடும் கூடாது” எனத் தெரிவித்தார்
மக்களவைத் தலைவர்
அப்போது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலையிட்டு, “ இந்தியாவின் ஜனநாயக முறையையும், தேர்தல் நடத்தும் முறையையும் உலகமே போற்றுகிறது. நான் பல நாடுகளுக்கு பயனித்திருக்கிறேன். உலக மக்கள் இந்திய ஜனநாயகத்தை புகழ்கிறார்கள் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் அனைவுரம் இதுபோன்ற பெரிய தேசத்தில் சிறப்பான தேர்தல் முறையை இதுவரை பார்த்ததில்லை என்று பாராட்டுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

கட்டாயமில்லை
மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த கிரண் ரிஜ்ஜு “ தேர்தலின்போது அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த சட்டம் ஏதும் இயற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. சிறையில் இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கக் கோரி அரசு வற்புறுத்தவில்லை. அவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர். பெரும்பாலான மக்களும் வாக்களிக்க வேண்டும், ஆரோக்கியமான ஜனநாயகம் வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஒட்டுமொத்த உலகமும் இந்திய தேசத்தின் தேர்ல்முறையைப் புகழ்கிறது” எனத் தெரிவித்தார்
