இந்தியா, பாரதம்... இரண்டு பெயர்களிலும் எனக்கு பிரச்சினை இல்லை: ராகுல் காந்தி பேச்சு
எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயரிட்டது, அரசாங்கம் எரிச்சல் அடையச் செய்திருக்கலாம் என்று நினைப்பதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகி, விவாதங்கள் நடைபெற்று வரும் சூழலில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் தனது கருத்தைக் கூறியுள்ளார். வெளிநாட்டு சுற்றுப்பிரயாணத்தில் இருக்கும் ராகுல் காந்தி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அந்நாட்டு மாணவர்களைச் சந்தித்துப் பேசினார்.
"இரண்டு பெயர்களிலும் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என்று கூறிய அவர், “உண்மையில் அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டு பெயர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 'இந்தியா, என்கிற பாரதம், மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்' என்றுதான் தொடங்குகிறது. எனவே, நான் உண்மையில் அதில் எந்த பிரச்சனையும் இருப்பதாகப் பார்க்கவில்லை. இரண்டு வார்த்தைகளும் முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை தான்." என்று தெரிவித்தார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயரிட்டது, அரசாங்கம் எரிச்சல் அடையச் செய்திருக்கலாம் என்று நினைப்பதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். தாம் இந்து மதம் தொடர்பான புத்தகங்களைப் படித்திருப்பதாவும், அதில் கூறப்பட்டுள்ளதை எல்லாம் பாஜகவினர் பின்பற்றவில்லை என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
டெல்லியில் இரண்டு நாட்கள் நடந்து முடிந்திருக்கும் ஜி20 உச்சிமாநாட்டை ஒட்டி ஜனாதிபதி அளிக்கும் இரவு விருந்துக்கு அழைப்பு விடுத்து உலக நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், பாரதக் குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டது. பிரதமர் மோடியின் இந்தோனேஷியா பயணத்திட்டத்திலும் பாரதப் பிரதமர் என்று குறிப்பிடப்பட்டது. இதனால், இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்ற சர்ச்சை உருவானது.
வரும் செப் 17ஆம் தேதி தொடங்க இருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதா கொண்டுவரப்பட வாய்ப்பு உள்ளது என்ற கணிப்பும் வெளியானது. பாஜக தலைவர்கள் பலர் அதனை ஆதரித்து பேசிவரும் நிலையில், தங்ஙள் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைத்ததால் தான் பாஜக பாரதம் என்ற பெயரை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
பெயர் மாற்றப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் பல திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்றும் அதனால், பல பின்விளைவுகள் ஏற்படும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.