நாளை காலை தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவார் என ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் ராயபேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யபட்டார்.
இதைதொடர்ந்து சசிகலா தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் பல்கலை கழக நூற்றாண்டு மண்டபத்தில் விரைவாக நடைபெற்றன.
இந்நிலையில் அன்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த ஆளுநர் வித்யாசாகர ராவ், திடீரென தமது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு டெல்லி திரும்பினார். அங்கிருந்து அவர் மும்பைக்கு சென்று விட்ட நிலையில், பதவியேற்பு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது ஆளுநர் வித்யாசாகர் ராவ் கலந்து கொள்வதாக இருந்த மும்பை நிகழ்ச்சிகள் திடீரென இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், நாளை காலை வித்யாசாகர் ராவ் சென்னை வருவார் எனவும் மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
