80 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ராஷ்ட்ரிய ஜனதாதளத்திற்கே ஆட்சியமைக்க உரிமை வழங்க வேண்டும் என்ற தேஜஸ்வியின் கோரிக்கையை ஆளுநர் திரிபாதி ஏற்க மறுத்துவிட்டார்.

பீகார் மாநிலத்தில் முதலமைச்சராக நிதிஷ்குமாரும், துணை முதலமைச்சராக லாலு பிரசாத் மகன் தேஜஸ்வியும் இருந்து வந்தனர்.

இதனிடையே லாலுவின் மீதும், அவரது மகன் தேஜஸ்வியின் மீதும் ஊழல் குற்றசாட்டு இருப்பதாக புகார் எழுந்தது. இதனால் லாலுவுக்கும் நிதிஷ்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்தது.

இந்நிலையில், நேற்று நிதிஷ்குமார் திடீரென தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு பிரதமர் மோடி வரவேற்பு அளித்தார்.

மேலும் நிதிஷ்குமாருக்கு பாஜக ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி தெரிவித்தார்.

இதையடுத்து அதிகாலை 2 மணிக்கு பீகார் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, லாலுவின் மகன் தேஜஸ்வி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகக் சென்றார்.

ஆனால், ராஷ்ட்ரிய ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் 5 பேரை மட்டுமே ஆளுநர் திரிபாதி சந்தித்தார். அப்போது, 80 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ராஷ்ட்ரிய ஜனதாதளத்திற்கே ஆட்சியமைக்க உரிமை வழங்க வேண்டும் என தேஜஸ்வி கோரிக்கை விடுத்தார்.

அதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவிக்கவே ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார் தேஜஸ்வி.