Asianet News TamilAsianet News Tamil

ஆளுநர் தமிழிசையின் பொங்கல் கொண்டாட்டம்.. கரகாட்டம், கோலாட்டம் என்று கலைகட்டிய ஆளுநர் மாளிகை..

புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடையில்லை என்பதால் தனி மனித இடைவெளியை கடைபிடித்து மகிழ்ச்சியுடன் பொங்கலைக் கொண்டாட வேண்டும் என பொதுமக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்த்ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் காணும் பொங்கல் நம்முடைய உறவினர்களைக் காணும் பொங்கலாக இருக்க வேண்டுமே தவிர, கொரோனாவைக் காணும் பொங்கலாக இருந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
 

Governor Tamilisai pongal celebration
Author
Puducherry, First Published Jan 13, 2022, 9:33 PM IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டார். இந்த பொங்கல் விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆளுநருக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் பரிசாக பாரம்பரிய உணவான அதிரசம், முறுக்குடன் பண்பாண்டம் வழங்கப்பட்டது. கரகாட்டம், கோலாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Governor Tamilisai pongal celebration

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்,  புதுச்சேரிக்கு இந்த பொங்கல் இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. ஏனென்றால், இந்திய இளைஞர் விழாவை பிரதமர் நேற்று தொடங்கி வைத்தார். இன்று நிறைவுரையை நான் ஆற்றுகிறேன். விவேகானந்தர், அரவிந்தர், பாரதியார் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழச்சியாகவும் இது அமைந்துள்ளது.

புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகளை விஞ்ஞானபூர்வமாக அணுகி கொண்டிருக்கிறோம். மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கொண்டாட்டங்களைக் கொண்டாடலாம். அதே நேரத்தில் எச்சரிக்கையாக கொண்டாட வேண்டும். கொரோனா முழுவதுமாக நம்மை விட்டு போகாது என்பது உலக சுகாதார நிறுவனத்தின் கருத்து. கொரோனாவுடன் வாழப்பழகி கொள்ள வேண்டும். விழாக்களை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும். அதற்கான உதாரணமாக வெட்டவெளியில் கொண்டாடப்பட்ட இந்த பொங்கல் விழா அமைந்திருக்கிறது.

Governor Tamilisai pongal celebration

கொரோனா மக்கள் கூடும் இடங்களிலும், மூடப்பட்ட அறைகளிலும் தான் அதிகமாக பரவும். எனவே, எல்லோரும் வெட்டவெளியில் தனிமனித இடைவெளியுடன் பொங்கலை கொண்டாட வேண்டும். அப்படித்தான் கொண்டாட வேண்டும் என்று முன்னோர்களும் கூறியுள்ளார்கள். வழிபாட்டு தலங்களுக்கு வருபவர்களும் முன்னெச்சரிக்கையாக தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஊரடங்கு போட்டு நாம் அடங்கி போவதை விட, கொரோனாவை எப்படி அடக்குவது என்று பார்க்க வேண்டும். பொங்கல் விழா மக்களின் உணர்வுகளோடும், பண்பாட்டோடும் கலந்தது. எனவே, புதுச்சேரி மக்களின் உணர்வுகளோடு இணைந்து அரசு இயங்கி வருகிறது.

Governor Tamilisai pongal celebration

காணும் பொங்கல் அன்று எல்லோரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். காணும் பொங்கல் நம்முடைய உறவினர்களைக் காணும் பொங்கலாக இருக்க வேண்டுமே தவிர, கொரோனாவைக் காணும் பொங்கலாக இருந்துவிடக் கூடாது. மக்கள் தன்னிலையை உணர்ந்து பொங்கலைக் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 15 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கிய பிரதமருக்கு நன்றி. இன்னும் 2 தினங்களில் அவர்களுக்கான தடுப்பூசி முழுமையாக போட்டு முடிக்கப்படும். முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். விரைவில் 100 சதவீதம் எட்டப்படும்.

Governor Tamilisai pongal celebration

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேற்று சந்தித்தேன். கொரோனாவைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசியை வேகப்படுத்தவும் புதுச்சேரி அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டினார். சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார். தடுப்பூசி போட்டுக்கொண்டு, சத்தான உணவு உண்ணுங்கள், முகக்கவசம் அணியுங்கள், தனி மனித இடைவெளியை கடைபிடித்து மகிழ்ச்சியுடன் பொங்கலைக் கொண்டாடுங்கள். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios