அதிரடி அறிவிப்புக்குப் பின் முதல் முறையாக கருத்து
புதுடெல்லி, நவ.11-
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பின், முதல் முறையாக கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘‘ஊழலை வேரோடு அழிக்கும் மத்திய அரசின் உறுதியில் எந்தவித ஊசலாட்டமும் இல்லை’’ என்று கூறி இருக்கிறார்.
அதிரடி அறிவிப்பு
கடந்த செவ்வாய்க்கிழமை இரவில், 500 மற்றும் 1000 ரூபாய் ேநாட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.
கருப்புப் பணம், கள்ள நோட்டுகள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும், இதனால் ஏற்படும் தற்காலிக சிரமங்களை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவித்து இருந்தார்.
ஊழலற்ற இந்தியா
அதன்பின், நேற்று 3 நாள் பயணமாக ஜப்பான் நாட்டிற்குப் புறப்பட்ட பிரதமர் மோடி, தனது ‘டுவிட்டர்’ பதிவில் அது குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது-
‘‘ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவது, வளர்ச்சித்திட்டங்களின் பயன்கள் அனைத்து குடிமக்களையும் சென்று அடைவதில் அரசு மேற்கொள்ளும் முயற்சியில் எந்த ஊசலாட்டமும் இல்லை என்று நான் உறுதி அளிக்கிறேன்.
மகிழ்ச்சி-நம்பிக்கை
வங்கிகளில், பொது மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றும்போது சிலர் தாங்களாகவே முன்வந்து மூத்த குடிமக்களுக்கு உதவி செய்துவருவதாக வெளியான தகவல், உண்மையிலேயே மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கிறது’’.
இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.
