government will not compel to link aadhaar order supreme court
பான் எண், மொபைல் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி மக்களை மத்திய அரசு கட்டாயப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ள மத்திய அரசு, காலக்கெடுவையும் வழங்கியுள்ளது.
இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுகோபால், பல்வேறு நலத்திட்டங்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கான அவகாசத்தை 2018 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், அதேசமயம் புதிய வங்கி கணக்கு தொடங்க ஆதார் எண் கட்டாயம் தேவை எனவும் தெரிவித்தார்.
ஆதார் தொடர்பான வழக்குகள் வரும் ஜனவரி 17ம் தேதி முதல் விசாரிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள், இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.
அதன்படி, ஆதார் இணைப்பு தொடர்பாக இடைக்கால உத்தரவை அரசியல் சாசன அமர்வு பிறப்பித்துள்ளது. அதில், பல்வேறு சேவைகளுடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியிருப்பதை ஏற்றது. அதேநேரத்தில், அரசின் நலத்திட்ட சலுகைகளைப் பெற ஆதாரை கட்டாயமாக கேட்கக்கூடாது. ஆதார் எண்ணை மக்கள், அவர்களாக விரும்பி வேண்டுமானால் இணைத்துக்கொள்ளலாமே தவிர மத்திய அரசு கட்டாயப்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
