government took action to prevent suicide

ராஜஸ்தானின் புகழ்பெற்ற கோட்டா நகரில் அதிகரித்து வரும் மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க ஸ்பிரிங் பொருத்தப்பட்ட காற்றாடிகள், சைரன் ஒலி போன்றவைகள் அமைக்கப்பட உள்ளன. இதனால், மாணவர்கள் காற்றாடியில் தூக்குப் போட்டு தற்கொலை ெசய்வது தடுக்கப்படும் எனத் தெரிவிக்கின்றனர்.

ராஜஸ்தானில் உற்ற ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். உள்ளிட்ட உயர்நிலைக் கல்விநிலையங்களில் படிக்க கோட்டா நகரில் ஏராளமான பயிற்சி நிலையங்கள் உள்ளன. பெரும்பாலான மாணவர்கள் கோட்டா நகரில் தங்கியே பயிறச்சி வகுப்புகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். இதனால், கோட்டா நகரில் எங்கு பார்த்தாலும் பயிற்சி நிலையங்கள் புற்றீசல் போல் இருக்கும்.

இங்கு ஒவ்வொரு பயிற்சி நிலையமும் மாணவர்களை அதிகமாக தேர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில், பாடங்களை நடத்தி, தேர்வு வைத்து, மாணவர்களுக்கு கடும் நெருக்கடியும் , அழுத்தத்தையும் அளிக்கின்றன. 

இதனால், தேர்வு நேரத்தில் மாணவர்கள் அச்சமடைந்து, மனவலிமை குறைந்து, தன்நம்பிக்கைஇன்றி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொள்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கோட்டா நகரில் மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கையின்படி, கோட்டா நகரில் கடந்த 2014ம் ஆண்டு 47 மாணவர்களும், 2015ம் ஆண்டு 17 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள். 

பெரும்பாலான மாணவர்கள், தாங்கள் தங்கியிருக்கும் விடுதி அறையின் காற்றாடியில் தூக்குமாட்டியே தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், கோட்டா நகரில் உள்ள 700 விடுதிகளும் சேர்ந்து தற்கொலையைத் தடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அதன்படி, காற்றாடியில் ஸ்பிரிங் பொருத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஸ்பிரிங் 20 கிலோமட்டுமே தாங்கும். ஒருவேளை மாணவர்கள் யாரேனும் தூக்குப்போட்டால், உடனடியாக காற்றாடி கீழே இறங்கிவிடும். 

மேலும், அந்த காற்றாடியோடு, ஒரு எச்சரிக்கை மணியும் பொருத்தப்பட்டு இருக்கும். காற்றாடி கீழே இறங்கும்போது, அந்த எச்சரிக்கை மணி அடித்து அனைவருக்கும் தெரியப்படுத்திவிடும்.

இது குறித்து விடுதிகள் சங்கத்தின் தலைவர் நவீன் மிட்டல் கூறுகையில், “ மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கும் வகையில், ஸ்பிரிங் பொருத்தப்பட்ட பேன்களை பொருத்த இருக்கிறோம். அந்த காற்றாடிகளோடு எச்சரிக்கை மணியும் சேர்ந்து இருக்கும். தற்கொலைக்கு முயன்றால், காற்றாடியும் கீழே விழும், எச்சரிக்கை மணியும் ஒலிக்கும். மேலும் மாணவர்கள் வருகை பதிவேட்டை, பெற்றோர்களின் செல்போன் எண்ணோடு இணைக்க உள்ளோம்.

 மாணவர்கள் விடுதிக்குள் நுழைந்து பயோமெட்ரிக் வருகை பதிவேட்டில் விரலை வைத்தவுடன், உடனடியாக பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.சென்றுவிடும். மேலும், மாணவர்கள் தங்கும் அறையிலும் கண்காணிப்பு கேமிரா வைக்கவும் முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.