21 நாட்கள் ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார இழப்பு காரணமாக அமைச்சர்கள் தொடங்கி அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 75 சதவீதம் குறைக்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் சமூகப் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நாட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதேபோல அரசின் சேவை துறைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள இந்த முடக்கத்தால், பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 
தெலங்கானாவில் இந்த இழப்பு 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலே இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால்,  மாநிலத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்க முடிவு அரசு அதிரடியாக முடிவெடுத்துள்ளது. முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு பிறகு ஊதிய குறைப்பு  அறிவிப்பை வெளியிட்டார் சந்திரசேகர ராவ். இந்த அறிவிப்பின்படி முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், மேயர்கள், நகராட்சி, பஞ்சாயத்து தலைவர்களுக்கு 75 சதவீதம் சம்பளம் குறைக்கப்பட உள்ளது.


அதேபோல, அரசு அலுவலர்களான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளுக்கு 60 சதவீதமும், அரசு ஊழியர்களுக்கு 50 சதவிகித ஊதியமும் குறைக்கப்பட உள்ளது. 4-வது நிலை ஊழியர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 10 சதவீதமும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தில் இருந்து 50 சதவீதம், இதர அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 50 சதவீதம் ஏப்ரல் மாதத்தில் பிடித்தம் செய்யப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால்  தெலங்கானாவில் அரசு ஊழியர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.