“என்னைச் சந்திக்க வரும் யாரும் எனக்கு லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை. எனக்கு அரசு ஊதியம் தருகிறது” என்ற வாசகத்துடன் மலப்புரத்தில் ஒரு அரசு ஊழியர் வேலை பார்த்து வருகிறார். இப்போது இவரின் புகைப்படம், செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் வைரலாப் பரவி வருகிறது.
 
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், அங்காடிபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிந்து வருபவர் அப்துல் சலீம் பலியால்தோடி. 40 சதவீதம் மாற்றுத்திறனாளியான அப்துல் சலீம், கடந்த 3 ஆண்டுகளாக இங்கு வேலை செய்து வருகிறார்.
 
இவரின் இருக்கை முன் போய் அமர்ந்தால், மலையாளத்தில் எழுதப்பட்ட, லஞ்சத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலகை நம்முன் தென்படும். “என்னைச் சந்திக்க வரும் யாரும் தங்களின் வேலைக்காக எனக்கு லஞ்சம் கொடுக்க வேண்டாம். உங்களுக்கு வேலை செய்யவே அரசு எனக்கு நாள்தோறும் ரூ.811, மாதத்துக்கு ரூ. 24 ஆயிரத்து 340 ஊதியம் அளிக்கிறது. என்னுடைய பணி உங்களுக்கு மனநிறைவு அளிக்காவிட்டால் என்னிடம் நீங்கள் கேட்கலாம்” என்ற வாசகத்துடன் பணியாற்றி வருகிறார்.
 
இந்த நோட்டீசை சமீபத்தில் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிட்டார். அதன்பின் கேளுங்களேன், அப்துல்சலீம் புகழ் வைரலாகப் பரவிட்டது. அப்துல்சலீம் விளம்பரத்துக்காக இதைச் செய்யவில்லை. உண்மையிலேயே நேர்மையானவர் என அலுவலகத்தில் உள்ள அனைத்து பணியாளர்களும் தெரிவிக்கிறார்கள்.
 
இதுகுறித்து அப்துல்சலீமிடம் கேட்டபோது, “எந்த விதமான அரசு வேலையிலும் சேவைதான் பிரதானம். பல்வேறு பணிகளுக்காக என்னிடம் வரும் மக்கள் வெறும் கையில் செல்லக்கூடாது. அவர்கள் மனநிறைவுடன் செல்ல வேண்டும்” என்று தெரிவித்தார்.
 
அங்காடிபுரம் பஞ்சாயத்துக்கு அலுவலகம் செல்லும் மக்கள் யாரும் அப்துல்சலீமை சந்திக்காமல் திரும்பிவருவதில்லை. அவரைச் சந்தித்து பேசிவிட்டுதான் வருகிறார்கள்.தான் ஓய்வில் இருந்தாலும் கூடதன்னால் ஆன உதவிகளை மக்களுக்கு செய்துவருகிறார் அப்துல்சலீம். மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள், ஆவணங்களை அளிப்பதையும் அவர் முன்நின்று செய்து கொடுகிறார்.
 
பஞ்சாயத்து செயலாளர் கே.சித்திக், சலீம் குறித்துக் கூறுகையில், “சலீமின் நடவடிக்ைகள் ஒட்டுமொத்த ஊழியர்கள் மீதான தவறான எண்ணத்தையும் மாற்றி, மக்கள் மத்தியில் சாதகமான எண்ணத்தை வளர்த்து இருக்கிறது” என்றார்.

மாநிலத்தில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவு சமீபத்தில் வெளியிட்ட அறிக்ைகயில், “ அரசு அலுவலகங்களிலேயே வருவாய் பிரிவும், உள்ளாட்சிப்பிரிவும் அதிகமான லஞ்சம் வாங்கும் பிரிவு” என்று கூறிய நிலையில், அப்துல் சலீம் போன்ற நபரின் செயல்பாடு தனித்துவமாக நிற்கிறது.