தனியார் டிவி சேனல்களில் 30 நிமிடம் பொதுநல நிகழ்ச்சி: மத்திய அரசு
தனியார் டிவி சேனல்களில் பொதுநல நிகழ்ச்சிகள் 30 நிமிடங்கள் வரை ஒளிபரப்பு செய்யப்படலாம். ஆனால் தொடர்ச்சியாக அரைமணிநேரம் ஒளிபரப்புவதாக இல்லாமல் சிறுசிறு பகுதிகளாக ஒளிபரப்ப வேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தனியார் டிவி சேனல்களில் 30 நிமிடங்களுக்கு பொதுநல நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்ப வேண்டும் என்று மத்திய தகவல் ஒளிப்புரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய தகவல் ஒளிபுரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் தனியார் தொலைக்காட்சிகளில் பொதுநலன் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி தனியார் டிவி சேனல்களில் பொதுநல நிகழ்ச்சிகள் 30 நிமிடங்கள் வரை ஒளிபரப்பு செய்யப்படலாம். ஆனால் தொடர்ச்சியாக அரைமணிநேரம் ஒளிபரப்புவதாக இல்லாமல் சிறுசிறு பகுதிகளாக ஒளிபரப்ப வேண்டும் என்று அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்த நிகழ்ச்சிகளை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஒளிபரப்பக் கூடாது. விளம்பர இடைவேளைக்கான நேரத்தில் பொதுநல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்காக விளம்பரங்களுக்கான 12 நிமிட நேர வரம்பில் தளர்வு அளிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.
அனைத்து தனியார் சேனல்களும் ஒளிபரப்பு சேவை இணையதளத்தில் மாதாந்திர அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுநல நிகழ்ச்சிகளை தனியார் டிவி சேனல்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு மறுஒளிபரப்பு செய்யலாம் என்றும் அதற்காக இணையதளம் ஒன்றையும் உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனியார் டிவி சேனல்களில் பொதுநல நிகழ்ச்சிகளை 30 நிமிடங்கள் ஒளிபரப்ப மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதற்கான நேரத்தையும் தாங்களே தேர்வு செய்துகொள்ளலாம் என்று கூறியிருந்தது.
அத்துடன் தேசிய ஒருமைப்பாடு, சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, கல்வியறிவு பரவல், நலிவுற்ற சமூகத்தினரின் நலம், தேசிய ஒருங்கிணைப்பு, கலாசாரம், பாரம்பரியம்
கல்வி, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், அறிவியல் தொழில்நுட்பம், பெண்கள் நலன், சமூகத்தின் நலிவுற்ற பிரிவினரின் நலன், சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார பாதுகாப்பு, தேசிய ஒருமைப்பாடு ஆகிய எட்டு பிரிவுகளில் பொதுநல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது.