கூகுள் நிறுவனம், ஆந்திராவில் தனது மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டேட்டா சென்டர் மையத்தை அமைக்கவுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 1,25,000 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த மையம், கடலுக்கடி இணைய இணைப்புக்கான முனையமாகவும் செயல்படும்.
இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, கூகுள் நிறுவனம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டேட்டா சென்டர் மையத்தை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் AI மையம்
இந்த அறிவிப்பை கூகுள் கிளவுட் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரி தாமஸ் குரியன் வெளியிட்டார். இந்நிறுவனம், அமெரிக்காவிற்கு வெளியே அமைக்க இருக்கும் ஏஐ மையங்களிலேயே இதுதான் மிகப்பெரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தாமஸ் குரியன் கூறுகையில், “விசாகப்பட்டினத்தில் பல ஜிகாவாட் திறன் கொண்ட புதிய ஏஐ மையத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் முதலீடு செய்ய உள்ள மிகப்பெரிய ஏஐ மையமாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 1,25,000 கோடி) மூலதன முதலீட்டில் இந்த மையம் பல ஜிகாவாட் அளவுக்கு விரிவாக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
கடலுக்கடியில் இன்டர்நெட் வசதி!
விசாகப்பட்டினம் மையம், கூகுளின் 12 நாடுகளில் பரவியுள்ள உலகளாவிய ஏஐ மையங்களின் வலையமைப்பில் இணையும். ஏஐ மேம்பாட்டு மையமாக மட்டுமின்றி, கடலுக்கடி இணைய இணைப்புக்கான (Subsea Cable Infrastructure) முக்கிய முனையமாகவும் விசாகப்பட்டினம் செயல்படும் என கூகுள் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் குறித்து ஆந்திர மாநில ஐ.டி. அமைச்சர் நாரா லோகேஷ் கூறுகையில், ஒரு ஜிகாவாட் திறன் கொண்ட திட்டத்தின் முதல் கட்டத்திற்கு 10 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 83,000 கோடி) முதலீடு செய்யப்படவுள்ளது. இது "தீவிரமான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஓராண்டு கால இடைவிடாத முயற்சியின்" விளைவு என்றும், இது மாநிலத்தின் கணினி திறனை அதிகரிக்க ஒரு பெரிய தொலைநோக்குப் பார்வையின் ஆரம்பம் என்றும் அவர் கூறினார்.
முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்
கூகுள் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமான ரைடன் இன்ஃபோடெக் (Raiden Infotech) கீழ், நகரத்தில் மூன்று வளாகங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த ஏஐ மையம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், இப்பகுதியை உலகளாவிய ஏஐ மற்றும் இணைப்பு மையமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இது மாநிலத்திற்கு ஒரு திருப்புமுனையான தருணம் என்று கூறி, இந்த வளர்ச்சிக்கு ஆதரவு அளித்த பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
உலகளவில் கிளவுட் சேவைகள் மற்றும் ஏஐ உள்கட்டமைப்புக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், கூகுளின் இந்த பிரம்மாண்ட முதலீடு, இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
