பெங்களூருக்கு மக்களுக்கு நற்செய்தி... கொட்டப் போகுது கனமழை... சுட்டெரிக்கும் வெயிலுக்கு குட்பை!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடுத்த சில நாட்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக, குளிர்ந்த காலநிலைக்கு பெயர் பெற்ற கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே அங்கு தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடி வரும் நிலையில், வெப்ப தலைநகராக பெங்களூரு மாறி வருகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இரண்டாவது வெப்பமான நாளை கர்நாடகத் தலைநகர் பெங்களூரு கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி பதிவு செய்தது.
பிப்ரவரி மாதம் கூட பெங்களூருவின் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டியது. இது பெங்களூருவில் அரிதான நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், ஏப்ரல் மாதம் வரை நீண்ட காலமாக பெங்களூருவில் மழையும் பெய்யவில்லை.
ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி: பிரதமர் மோடி விமர்சனம்!
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அடுத்த சில நாட்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், மே மாதம் 5ஆம் தேதியன்று பெங்களூருவில் முதலாவதாக பரவலான இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், அடுத்த இரண்டு வாரங்களில் அடுத்தடுத்த சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெங்களூருவில் பெய்யும் எனவும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பெங்களூருவில் மே 1, 2 ஆகிய தேதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது கடுமையான வெப்பத்திலிருந்து பெங்களூரு வாசிகளுக்கு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூருவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழையுடன் ஓரளவு மேகமூட்டமான வானத்தை எதிர்பார்க்கலாம். மே 1 ஆம் தேதி 23 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், மே 2 ஆம் தேதி 23 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.