ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி: பிரதமர் மோடி விமர்சனம்!
உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கான்கின்றன. அம்மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி 62 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் போட்டியிடுகிறது. அம்மாநிலத்தில் கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் காட்சியின் கோட்டையான ரேபரேலி, அமேதி மக்களவைத் தொகுதிகளுக்கு மட்டும் நீண்ட இழுபறிக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது.
அதன்படி, அமேதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட ராகுல், பிரியங்கா காந்தி விரும்பவில்லை எனவும், இதனால் காங்கிரஸ் தலைமை குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இந்த இரண்டு தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை மாற்றி காங்கிரஸ் தலைமை நேற்று இரவு அறிவித்தது. அதன்படி, அமேதியில் காங்கிரஸ் சார்பில் கிஷாரி லால் ஷர்மா என்பவரும், ரேபரேலியில் ராகுல் காந்தியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். வழக்கம்போல், பிரியங்கா காந்தி இந்த முறையும் தேர்தல் அரசியலில் இருந்து விலகியது காங்கிரஸ் தொண்டர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
அமேதி, ரேபரேலியில் போட்டியிட ராகுல், பிரியங்கா தயக்கம்: இன்றிரவுக்குள் முடிவு!
மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்டத்தில் மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள அமேதி, ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அவருடன், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் உடனிருந்தனர்.
இதனிடையே, ராகுல் காந்தியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு அதீத பயம் ஏற்பட்டதால் தொகுதி மாறியுள்ளார் எனவும், வயநாடு தொகுதியில் தோற்றுவிடுவோம் என தெரிந்ததால் புதிய தொகுதியில் அவர் போட்டியிடுவதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட பயந்து மாநிலங்களவை எம்.பி. ஆகியுள்ளதாகவும் பிரதமர் மோடி சாடினார்.