மத்திய அரசில் பணி புரிந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், ஓய்வூதியக் கணக்கு தொடங்க வங்கிக்கு இனி அலையத் தேவையில்லை. இனி, அவர்கள் ஓய்வு பெறும் அன்றே, ஓய்வூதிய கணக்குக்கான உத்தரவை வழங்கப்படும் என்று மத்திய அரசின் பணியாள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசில் 48 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர், 53 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதிலும், அதன் உத்தரவு நகல் கிடைப்பதிலும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக அரசிடம் கவலைத் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, மத்தியஅரசு கடந்த 1-ந்தேதி புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் அனைத்து துறைகளுக்கும், பணியாளர் துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது :

மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்கள், தங்கள் ஓய்வூதியக் கணக்கை தொடங்குதவற்காக வங்கிகக்கு அலையவிடக் கூடாது. அவர்கள் ஓய்வுபெறும் நாளுக்கு முன்ப வங்கிக்கு அனைத்து விதமான ஆவணங்களையும் அளிக்க வேண்டும். அதன்பின், வங்கியில் இருந்து அளிக்கப்படும் ‘பென்ஷன் பேமென்ட் காப்பி’(பி.பி.ஓ.) ஊழியர் ஓய்வூதியம் பெறும் நாள்அன்று அளிக்கப்பட வேண்டும்.

ஒரு ஊழியர் தனது தலைமை அலுவலகத்தில் இருந்து வௌி ஊர்களில் பணியாற்றி வந்தால், அவர் சில காரணங்களால், தான் வங்கியில் இருந்தே அந்த பென்ஷன் பேமென்ட் காப்பியை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறினால், அது குறித்து தலைமை அலுவலகத்துக்கு தெரியப்படுத்திக்கொள்ளலாம் . இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல நேரங்களில் ஓய்வு பெறும் ஊழியர்கள் தங்களின் முதல் பென்ஷன் பேமெண்ட் காப்பி அவர்களிடம் ஒப்படைக்கப்படாமல், நேரடியாக வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், பல நேரங்களில் ஓய்வூதியம் பெறுபவர்கள் சிரமங்களைச் சந்திக்கிறார்கள். இதைத் தவிர்க்கும் வகையில் ஓய்வூதியம் பெறும் நாள் அன்றே பேமெண்ட் காப்பி நகல் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த உத்தரவை மத்திய அரசின் அனைத்து துறைகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய பணியாளர் துறை கேட்டுக்கொண்டுள்ளது.