Goa state confusion in the Congress - within hours of assuming office MLA Resignation

கோவா சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று பெரும்பான்மையை நிரூபித்தார். நம்பிக்கை இல்லா தீர்மானம் முடிந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஷ்வாஜித் ரானே தனது பதவியை ராஜினாமா செய்தார்

எம்எல்ஏக்கள் விவரம்

கோவா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 4-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி் அதிகபட்சமாக 17 இடங்களிலும், பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்று தொங்கு சட்டசபை உருவானது. பிராந்திய கட்சிகளான மகாராஷ்டிரவதி கோமந்தக் கட்சிக்கு 3 இடங்களும், கோவா முன்ணி கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்தன. சுயேச்சையாக போட்டியிட்டவர்கள் 3 இடத்தில் வெற்றி பெற்றார்கள். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது.

பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் கேட்டுக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதிரடி நடவடிக்கை

இதற்கிடையே மத்திய அமைச்சராக இருக்கும் மனோகர் பாரிக்கர் மாநில அரசியலுக்கு திரும்பினால் பாஜகவை ஆதரிப்போம் என்று பிராந்திய கட்சிகள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் அதிரடியாக மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், 13 பாஜக எம்எல்ஏக்கள், மகாராஷ்டிரவதி கோமந்தக் கட்சி உறுப்பினர்கள் 3 பேர், கோவா முன்னணி கட்சியின் 3 உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சைகள் 2 பேர் என மொத்தம் 21 உறுப்பினர்களுடன் கவர்னர் மிருதுளா சிங்கை கடந்த ஞாயிறன்று சந்தித்தார். அப்போது, ஆட்சி அமைக்க தேவையான 21 பேரின் பலம் பாஜகவுக்கு இருப்பதாக தெரிவித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

பதவியேற்பு விழா

அதன் தொடர்ச்சியாக கடந்த 14-ந்தேதி பாஜக அரசின் பதவி ஏற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு தடை விதிக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பு விழாவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறியதோடு, பெரும்பான்மையை 16-ந்தேதி நிரூபிக்கவும் உத்தரவிட்டது.

இதற்கிடையே, கடந்த 14-ந்தேதி கோவா முதல் அமைச்சராக மனோகர் பாரிக்கர் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவருடன் பாஜகவில் 2, மகாராஷ்டிரவதி கோமந்தக் கட்சி உறுப்பினர்கள் 2 பேர், கோவா முன்னணியின் 3 எம்எல்ஏக்கள், சுயேச்சைகள் 2 பேர் என மொத்தம் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

இந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக சிறப்பு பேரவைக் கூட்டம் இன்று கூட்டப்பட்டது. இதற்கு தற்காலிக சபாநாயகராக பாஜக எம்எல்ஏ சித்தார்த் குன்கோலியங்கர் நியமிக்கப்பட்டார். நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தையொட்டி வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் கொண்டு வந்தார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் பிரதாப் சிங் ரானே குறுக்கிட்டு எம்.எல்.ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி விட்டதாக கூறி, கேள்வி கேட்பதற்கு (பாயின்ட் ஆப் ஆர்டர்) சபாநாயகரிடம் உரிமை கோரினார்.

தீர்மானம் நிறைவேறியது

இதற்கு சபாநாயகர் குன்கோலியங்கர் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பாஜக அரசை ஆதரிப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்த 22 எம்.எல்.ஏக்களும் பாஜக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 16 பேர் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் நிறைவேறி விட்டதாக சபாநாயகர் சித்தார்த் குன்கோலியங்கர் அறிவித்தார். இதன் பின்னர் அவை வரும் 22-ந்தேதிக்கு (வரும் புதன்) ஒத்தி வைக்கப்பட்டது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா

பதவி ஏற்றுக் கொண்ட அடுத்த சில மணி நேரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ விஷ்வாஜித் ரானே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவர் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘நான் ராஜினாமா செய்திருப்பது என்பது காங்கிரஸ் தலைவர்களின் தவறான அணுகுமுறைக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் முதல் கிளர்ச்சியாகும். கோவாவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் தலைவர்கள் தவறி விட்டனர். நான் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்’ என்றார். இதனால் கோவா மாநில காங்கிரஸ் கட்சியில் திடீர் குழப்பம் ஏற்பட்டுள்ளது.