கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து பாஜக தலைவர்கள் கோவா விரைகின்றனர்.

கோவா முதல்வராக உள்ள மனோகர் பாரிக்கர் கடந்த வருடம் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் அமெரிக்கா சென்று அறுவை கிசி்ச்சை செய்து கொண்டார். பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவர் மாண்டோவில் நதியின் கறுக்கே அமையும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட போது மூக்கில் குழய் பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்து வந்தது. 

இதற்கிடையே பாஜக எம்எல்ஏ பிரான்சிஸ் டி சோசா சமீபத்தில் மரணமடைந்தார். இதனையடுத்து பாஜக பெருபான்மையை இழந்துவிட்டது என்று கூறி காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது. 

இந்நிலையில், மனோகர் பாரிகரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் பாஜக மூத்த தலைவர்கள் கோவா விரைந்துள்ளனர். மனோகர் பாரிக்கருக்கு பதிலாக புதிய முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும் பணியில் பாஜக மூத்த நிர்வாகிகள் ஈடுபடுட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், எம்.எல்.ஏக்களில் ஒருவரை மட்டுமே புதிய முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்று கோவா மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் அக்கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கோவா அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.