கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக முதல்வர் பிரமோத் சவாந்த் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றுள்ளார். 20 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அரசு வெற்றி பெற்றது. 

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 17-ம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் பாஜவின் பலம் 12-ஆக சரிந்தது. 14 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும்பான்மை கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு காங்கிரஸ், அம்மாநில ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது. இதனால், பாரிக்கரின் இறுதிச்சடங்கு நடந்த நேற்று முன்தினமே ஆட்சியை தக்க வைக்க புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டது. 

இந்நிலையில் புதிய முதல்வராக பிரமோத் சாவ்ந்த தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவே அவர் பதவியேற்றார். அவருடன் பாஜகவின் கூட்டணி கட்சிகளான கோவா முன்னணி கட்சி தலைவர் விஜய் தேசாய், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி தலைவர் சுதின் தவாலிகர் இருவருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. 

இந்நிலையில் சட்டப்பேரவையில் பெருபான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி, ஆளுநர் மிருதுளா சின்ஹாவுக்கு கடிதம் மூலம் முதல்வர் பிரமோத் சாவந்த் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் இன்று காலை 11.30 மணிக்கு சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் இன்று காலை சட்டப்பேரவை கூட்டம் கூடியது. அப்போது முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 19 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையான நிலையில், 20 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வர் பிரமோத் சவாந்த் வெற்றி பெற்றார். முதல்வர் பிரமோத் சவாந்த்திற்கு எதிராக 15 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.