Go To Jail Says Supreme Court To Ex Judge CS Karnan Rejects Bail

உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், கைது செய்யப்பட்டு சென்னையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் கொல்கத்தா பிரெசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக, முன்னாள் நீதிபதி கர்ணன் சார்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அவமதிப்பு வழக்கு

தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி, அவதூறு புகார்கள் தெரிவித்தார். இதையடுத்து, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் தொடர்ந்தது.

கைது உத்தரவு

இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரைக் கைது செய்யும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு கடந்த மே 9-ம் தேதி கொல்கத்தா போலீஸாருக்கு உத்தரவிட்டது. இந்த கைது உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தலைமறைவு

இதையடுத்து, தமிழகம் வந்த கொல்கத்தா போலீஸார், அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இது அறிந்து நீதிபதி கர்ணன் தலைமறைவானதால், அவரைக் கைது செய்ய முடியவில்லை.

ஓய்வு

கடந்த 11-ம் தேதி நீதிபதி கர்ணனுக்கு 62 வயது பூர்த்தியானதால், அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. தலைமறைவு நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றார்.

கோவையில் பதுங்கல்

இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் அவர் பதுங்கியுள்ளதாக கொல்கத்தாபோலீஸுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை மாநகர போலீசாரின் உதவியை அவர்கள் நாடினர்.

மேற்கு வங்க போலீஸ் சார்பில் 3 தனிப்படையினர் மற்றும் கோவை மாநகர, மாவட்ட போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். கர்ணனின்செல்போனின் அழைப்புகளை தீவிரமாக ஆய்வு செய்ததில், அவர் கோவை அருகேமலுமிச்சம்பட்டி யில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

கைது

இதையடுத்து, கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை, கோவையில் நேற்று முன் தினம் கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.

கொலக்கத்தா

அதைத் தொடர்ந்து விமானம் மூலம் சென்னைக்கு நேற்று முன் தினம் இரவு கர்ணன் அழைத்து வரப்பட்டார். அதன்பின் நள்ளிரவில் ஏர் இந்தியா விமானம் மூலம், கர்ணனை போலீசார் கொல்கத்தா அழைத்து சென்றனர்.

ஜாமீன் மனு

இந்த சூழலில், நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் வழங்கக்கோரி அவரின் வழக்கறிஞர்நெடும்பரா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் டி.ஓய்.சந்திரசூத், எஸ்.கே.கவுல் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கர்ணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் வழங்கக் கோரினார், 7நீதிபதிகள் கொண்ட அமர்வு தண்டனை வழங்கி இருந்தாலும், அதை ரத்து செய்யும் அதிகாரம் விடுமுறை கால அமர்வுக்கு உண்டு என்று வாதிட்டார்.

அதிகாரமில்ைல

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், “ கர்ணனுக்கு கொடுத்த தண்டனை என்பது 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு வழங்கியது. இந்த உத்தரவுக்கு நாங்களும் கட்டுப்பட வேண்டும்.நாங்கள் விடுமுறைக் கால அமர்வு என்தால், அந்த உத்தரவை எங்களால் மீற முடியாது. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த கோரிக்கையை தலைமை நீதிபதியிடம் முன் வைக்கவும்’’ எனத் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து, கொல்கத்தா அழைத்துச் செல்லப்பட்ட கர்ணனுக்கு விமானநிலையத்திலேயே மருத்துவப்பரிசோதனைகள் அனைத்தையும் போலீசார் நடத்தி முடித்தனர். அதன்பின், கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி சிறையில் நேற்று கர்ணன் அடைக்கப்பட்டார்.