வரலாற்று காலத்தில் நெற் களத்தில் நெல்லை தூற்றிக்கொண்டிருந்த தமிழ் பெண் ஒருத்தியை தாக்க புலிவந்த போது, அதை தனது கையில் வைத்திருந்த முறத்தால் அடித்து விரட்டியவள் வீரத் தமிழ்பெண் என வரலாற்று கதையில் கேள்விப்பட்டு இருக்கிறோம். 

ஆனால், 21-ம் நூற்றாண்டில், கம்பால் சிங்கத்தை அடித்து விரட்டிய வீர இந்தியப் பெண்கள் குறித்த ருசிகர சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டம், துல்சியாம் பகுதியை அருகே சிங்கங்களுக்கான கிர் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த கிர் சரணாயலத்துக்கு சில கிலோமீட்டர் தொலைவில் மேதாவாஸ் எனும் கிராமம் இருக்கிறது. 

இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் சான்டோக் ரபாரி(வயது19), மையா(18). இருவரும் சகோதரிகள். இவர்களின் தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கை, கால் செயல்படாமல் வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார். 

இதனால், தனது தந்தைக்கு சொந்தமான பசுக்கள், ஆடுகளை காட்டில் மேய்த்து விட்டு வந்த பெண்கள் வருவார்கள். இந்நிலையில், கடந்த 9-ந்தேதி இதேபோல்,சான்டோக் ரபாரியும், மையாவும், தங்களது கால்நடைகளை கூட்டிக்கொண்டு மேய்ச்சலுக்கு சென்றனர். 

அப்போது, கிர் சரணாலயத்தில் இருந்து தப்பிய ஒரு சிங்கம், இந்த பெண்கள் மேய்க்கும் கால்நடையை நோட்டமிட்டுள்ளது. இந்த பெண்கள் கண்அசந்த நேரத்தில், கால்நடைக் கூட்டத்துக்குள் புகுந்து பசுமாட்டை அடித்து, வீழ்த்த சிங்கம் முற்பட்டு ஓடியது. சிங்கத்தைப் பார்த்த மாடுகளும், ஆடுகளும் தெறித்து ஓடின. 

இதைக் கண்டு பதறிய சகோதரிகள் இருவரும், ஓடிச் சென்று பார்த்ததில், ஒரு சிங்கம் ஒரு பசுமாட்டை துரத்திச் செல்வதைப் கண்டனர். உடனே, அந்த சிங்கத்தை விரட்டிச் சென்று, அதன் பிடியில் இருந்து பசுமாட்டை காப்பாற்றினர். மேலும், தங்களை தாக்க முற்பட்ட சிங்கத்தை தங்கள் கையில் வைத்திருந்த கம்பால், துணிச்சலாக அடித்து துரத்தி சகோதரிகள் இருவரும், தங்கள் கால்நடைகளைக் காப்பாற்றினர்.

இதைக் கண்ட அப்பகுதியில் ஆடு,மாடுகள் மேய்த்துக்கொண்டிருந்த மற்றவர்கள் ஆச்சர்யத்தில் சிலிர்த்துப் போனார்கள். 

இதையடுத்து, பசு காப்பகம் நடத்திவரும் மன்சுக் சுவாக்யா என்பவர், இந்த சகோதரிகளின் வீரச்செயலைக் கேள்விப்பட்டும், பார்த்தும் அசந்து போயுள்ளார். 

அவர் கூறுகையில், “ ரபாரி, மையாவின் வீரச் செயலைப் பார்க்க நான் 5 நாட்கள் இந்த பெண்களுடன் காட்டுக்குள் சென்றேன். அப்போது, இதேபோல், ஒருநாள் ஒரு சிங்கம் கால் நடைகளை துரத்த முயற்சிக்கும் போது, இந்த சகோதரிகளான ரபாரி, மையா இருவரும் சிங்கத்தை கண்டு அஞ்சாமல் தங்களின் கம்பால் சிங்கத்தை அடித்து துரத்தியதைக் கண்டு அசந்துவிட்டேன். சிங்கத்தை கண்டு பயப்படாமல் கம்பால் விரட்டும் இந்த பெண்கள் உண்மையில் வீரப்பெண்மணிகள் தான்'' என்று தெரிவித்தார்.