திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடத்தப்பட்ட 7 வயது சிறுமி பெங்களூரில் பத்திரமாக மீட்கப்பட்டார். 

ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 23-ம் தேதி தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றார். 
அப்போது அவரது 7 வயது மகள் நந்தினி மாயமானார். இதுகுறித்து திரு. ரமேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருமலை போலீசார், கோயிலில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தனர்.
 அப்போது பெண் ஒருவர் சிறுமி நந்தினியை அழைத்து சென்றது பதிவாகியிருந்தது. 
இதனையடுத்து 12 தனிப்படைகள் அமைத்து ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.
 அப்போது குழந்தையை கடத்தி சென்ற பெண் பெங்களூரை சேர்ந்த சாலினி என்பதை கண்டுபிடித்த போலீசார், அவரை கைது செய்து சிறுமி நந்தினியை பத்திரமாக மீட்டனர். 
கைது செய்யப்பட்ட சாலினியிடம் குழந்தையை கடத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் மகந்தி தெரிவித்துள்ளார்.