கணவர் உள்ளிட்ட குடும்பத்தார் மீது போலியாக பாலியல் புகார் கொடுத்து தன்னை கூட்டு பலாத்காரம் செய்ததாகக் கூறிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரோடக் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹரியானா மாநிலம் ரோடக் நகரைச் சேர்ந்தவர் மீனாட்சி(வயது28). இவர் கடந்த 2010ம் ஆண்டு ஜூன்மாதம், போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், தன்னை இருவர் தன்னை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தனர். அதில் ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்குபின், தனது கணவர், கணவரின் குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக தொடர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி அந்தபெண்ணினஅ கணவர், கணவரின் குடும்பத்தினரைக் கைது செய்தனர். ரோடக் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.

அதேசமயம், மீனாட்சி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு மாறாக இருப்பதாகக் கூறி அவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், மீனாட்சி நீதிமன்றத்துக்கு அளித்த பதில் திருப்திகரமாக இல்லை.

இதையடுத்து, அந்த புகாரை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டது. அந்த விசாரணையில் மீனாட்சி கொடுத்த புகார், சாட்சியக்கள் அனைத்தும் போலியானது என நீதிமன்றத்துக்கு தெரியவந்தது.

இதையடுத்து போலியாக சாட்சியங்கள் அளித்து கணவரையும், கணவரின் குடும்பத்தாரையும் தண்டனை பெற்றுக்கொடுக்க மீனாட்சி முயன்றதை நீதிமன்றம் கண்டுபிடித்தது.

இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு வியாழக்கிழமை கூறப்பட்டது. அப்போது நீதிபதி ரித்து ஓய்.கே. பேகல் கூறுகையில்,  போலியான அவணங்களை அளித்து நீதிமன்றத்தை ஏமாற்றியது, தவறாக குற்றம்சாட்டுதல் ஆகியவற்றின் அடிப்படையில் மீனாட்சிக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், 7 ஆண்டுகள் சிறையும் விதித்து தீர்ப்பளித்தார்.