Asianet News TamilAsianet News Tamil

ஆதார் இணைக்காததால் அரிசி இல்லை... பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்த 11 வயது சிறுமி..! குடும்பத்தை துரத்தும் கிராமம்..!

girl child dead due to hungry
girl child dead due to hungry
Author
First Published Oct 22, 2017, 2:28 PM IST


ஜார்கண்ட் மாநிலத்தில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் அரிசி கிடைக்காமல் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த குடும்பத்தையே ஊரை விட்டு விரட்ட, கிராம மக்கள் சிலர் முயல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சிம்டெகா மாவட்டத்தில் உள்ள கரிமதி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கோய்லி தேவி. ஆதார் எண் இணைக்கப்படாததால் அவரது குடும்பத்தின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோய்லி தேவியின் குடும்பத்தில், அவருடன் சேர்ந்து 10 பேர் உள்ளனர். நிலையான வேலை இல்லாமல், சொந்த நிலமும் இல்லாமல் மிகவும் குறைவான வருவாயை வைத்து வாழ்ந்து வருகின்றனர். எனவே ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்களை பெற்று அவர்கள் பசியை ஆற்றிவந்த நிலையில், ரேஷன் கார்டை ரத்து செய்ததால் அவர்கள் பசியால் வாடியுள்ளனர்.

கோய்லி தேவியின் 11 வயது மகள் சந்தோஷி குமாரி,  பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவை உண்டு வந்துள்ளார். துர்கா பூஜையை முன்னிட்டு பள்ளி விடுமுறை விடப்பட்டது. 

இதனால் பள்ளியில் கிடைத்த ஒருவேளை மதிய உணவு கூட கிடைக்காமல் 8 நாட்களாக அந்த சிறுமி பட்டினியால் அவதிப்பட்டுள்ளார். உணவில்லாமல் பட்டினியால் வாடிய அந்த சிறுமி, கடந்த செப்டம்பர் 28-ம் தேதி சிறுமி  பரிதாபமாக உயிரிழந்தார். 

girl child dead due to hungry

சிறுமி இறப்புக்கு ரேஷன் பொருள் மறுக்கப்பட்டதே காரணம் என்று சமூக ஆர்வலர் தீரஜ்குமார் கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஊடங்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இந்த சம்பவம் நாடு முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஏற்கனவே குழந்தைக்கு உணவளிக்க முடியாததால் மகளை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்தை தற்போது ஊரை விட்டே வெளியேறுமாறு கிராம மக்கள் மிரட்டுவதாக கோய்லி தேவி புகார் தெரிவித்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து அவர் குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் சிறிது சிறிதாக அனைத்திற்குமே ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது.

ஆதார் எண் இணைக்காததால் ரேஷன் கார்டை ரத்து செய்து உணவுப் பொருள் வழங்கமால் ஒரு சிறுமி பட்டினியால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோல் இன்னொரு மரணம் இந்தியாவில் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios