ராஜஸ்தான் சட்டப்பேரவையில் ஆவிகள் நடமாட்டம் உள்ளதாகவும், யாகம் நடத்தி பேயை விரட்ட வேண்டும் என்றும் அம்மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜேவிடம், சட்டப்பேரவை அரசு கொறடா முறையிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த வசுந்தரா ராஜே முதலமைச்சராக உள்ளார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, தேர்தல் பணிகளில் ஆளும் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மண்டேல்கர் தொகுதி எம்.எல்.ஏ.வான கீர்த்தி குமாரி கடந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அதுபோலவே நத்வாரா தொகுதி எம்.எல்.ஏ. கல்யாண்சிங், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். பாஜக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில், அம்மாநில பாஜகவினரிடையே பயம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய தலைமைச் செயலகம் கடந்த 2001 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலகத்தில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும், அங்கு துர் ஆவிகள் இருப்பதாகவும் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகின்றனர். இது குறித்து எம்.எல்.ஏ. ஹபிபூர் ரஹ்மான் கூறும்போது, தற்போதுள்ள தலைமைச் செயலகம், ஒரு காலத்தில் இடுகாடாக இருந்துள்ளது என்றும் அதனால் அங்கு ஆவிகள் மற்றும் பேய் நடமாட்டம் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

எனவே தலைமை செயலகத்தில் இருந்து ஆவிகளை வெளியேற்றி, சுத்தப்படுத்தும் பணி அவசியமாக செய்ய வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கைகளில் முதலமைச்சர் வசுந்தரா ராஜே எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

ராஜஸ்தான் சட்டப்பேரவை அரசு கொறாடா கலுலால் குஜ்ஜார் கூறும்போது, புதிய தலைமை செயலகத்தில் பேய் இருப்பதாக பல எம்.எல்.ஏ.க்களும் உறுதியாக கூறுகின்றனர். அவர்களது அச்சத்தைப் போக்க வேண்டியது மாநில அரசின் கடமை. எனவே அங்கு யாகம் நடத்தி பேயை விரட்ட வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர் வசுந்தரா ராஜே மட்டுமின்றி சட்டப்பேரவை சபாநாயகருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், சட்டப்பேரவை
தேர்தலுக்கு முன்னதாக இதனை முடிக்க வேண்டும் என்றார்.